ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை: ஒற்றுமை ஆபீஸ், 1வது பதிப்பு, 1938. (மதராஸ்: த ரோயல் பிரின்டிங் வேர்க்ஸ், மவுண்ட் ரோடு).
vi, 114 பக்கம், விலை: ரூபா 1.00., அளவு: 18×11.5 சமீ.
பரிபாடல், சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையுள் ஐந்தாவதாகவுள்ளது. பரிபாடலென்பது செய்யுள் வகையாற் பெற்றபெயராகும். சங்ககாலத்தில் வழங்கிய செய்யுட்கள் வெண்பா, அகவல், வஞ்சி, கலி என்னும் நான்கு பாக்களுமேயாகும். பரிபாடலென்பது, வெண்பா உறுப்பாகி இன்னபாவென்று உணராமல் பொதுப்பட நிற்கும் இயல்புடைய ஒருவகை இசைப்பாவாகும். இப்பாடலுக்குச் சிறுமை இருபத்தைந்து அடியும் பெருமை நானூறு அடியுமாகும். பரிபாடற் செய்யுட்களின் தொகை எழுபது. அவற்றுள் திருமாலுக்கு எட்டும் முருகவேளுக்கு முப்பத்தொன்றும் காடுகிழாளுக்கு ஒன்றும் வைகையாற்றுக்கு இருபத்தாறும் மதுரைக்கு நான்கும் உரியன. இருப்பினும் இப்பொழுது கிடைத்துள்ள திருமாலுக்குரிய பாடல்கள் ஏழு, முருகனுக்குரிய பாடல்கள் எட்டு, வைகைக்குரியவை ஒன்பது, மதுரைக்குரியது ஒன்றுமாக இருபத்தைந்து பாடல்களே. இவை மொத்தம் 2034 அடிகள் கொண்டவை. இந்நூலில் சங்கு, சமம், சந்தனம், சமழ்ப்பு, சனம், சரணம், சகடம், சலம் முதலிய எட்டுச் சகரமுதற்சொற்கள் வந்திருக்கின்றன. பழந்தமிழரின் பழக்கவழக்கம், கடவுட்கொள்கை, நீர்விளையாட்டு, முதலியவற்றை இந்நூல் சிறப்பாகக் கூறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 601).