அல். அஸூமத். வெல்லம்பிட்டிய: அல்.அஸ{மத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 14: பிரின்ட் சிட்டி).
(8), 206 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-52134-7-9.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் 1990 முதல் 1994 வரையிலான காலப்பகுதியில் அல் அஸ{மத் வழங்கிய கவிதைச்சரம் நிகழ்ச்சியில் புதியவர்களும் அனுபவம் மிக்கவர்களுமாக 468 கவிஞர்கள்வரை பங்கேற்றுத் தம் கவிதைகளை வடித்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் வளரும் இளம் கவிஞர்களுக்கு ஆற்றிய அறிவுரைகளின் தொகுப்பே இக்கட்டுரை நூலாகும். பின்னாளில் இவை தினகரன் வாரமஞ்சரியில் தொடராகப் பிரசுரமாகியுமிருந்தன. முகம், புதுக்கவிதை எனும் பெயர் செம்மையானது தானா?, வெற்றுக் கூச்சல்கள், கவிதைச் செழுமை, தமிழ்ப் பாக்களின் தொன்மை, தமிழ்க் கவிதையின் வரலாற்றுக் குறிப்பு, கவிதை எழுத இலக்கணம் தேவையா?, படிமம் – குறியீடுகள், இயல்பு நவிற்சி, பாடுபொருளும் தலைப்பும், புதுமை, உள்வாங்குதல், சிந்தனைச் சீர்மை-அசை போடுதல், சமூகப் பிரக்ஞை, வெளிப்படுதலும் செப்பனிடுதலும், கவிதைக்குரிய மொழிநடை, படிமக் கையாள்கை, யாப்பிலிக் கவிதைகளின் அடிகள், நிறுத்தற் குறிகள், இருண்மைக் கவிதைகள், பிறமொழிக் கவிதையினங்கள், ஓசை நயம், கற்பனை, அருட்டுணர்வு ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கலாபூஷணம் அல் அஸூமத் புகழ்மிக்க ஈழத்துக் கவிஞர். 1942.11.22 இல் பிறந்த இவரது இயற்பெயர் பொன்னையா வேலாயுதம். தந்தையார் கேரளத்தின் நெய்யாற்றின் கரையைச் சேர்ந்தவரும், கே.வீ.ராமன் நாயர் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான கே.வீ.பொன்னையா. இவரது தாய் மரியாயி. அல்-அஸூமத்தின் இயற்பெயர் வேலாயுதம். 1960-1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழிநுட்பக் கல்லூரியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரை பணியாற்றினார். இவர் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் ‘கவித் தாரகை’ விருது வழங்கப்பெற்றும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினரால் 2008 இல் ‘இலக்கிய சாகரம்’ பட்டம் வழங்கப்பெற்றும் கௌரவிக்கப்பட்டவர். காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 13வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ‘தமிழ் மாமணி” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூன்று இலங்கையருள் இவரும் ஒருவர். இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப் புலவர் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுங்காவியங்கள் எழுதியுள்ளார். புலராப் பொழுதுகள் (குறுங்காவியம்), மலைக்குயில் (கவிதைகள்), அல் அஸ{மத் கவிதைகள் (கவிதைகள் 1987), வெள்ளை மரம் (சிறுகதைகள் 2001), குரல் வழிக் கவிதைகள் (கவிதைகள் 2009), பிலால்: ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு (மொழிப்பெயர்ப்பு 2010), அறுவடைக் கனவுகள் (நாவல் 2010), ஆயன்னையம்மாதாய் (சிறுகதைகள் 2012) ஆகியவை இவரது நூல்கள். யாழ்ப்பாண இலக்கிய வட்டத்தின் மிகச்சிறந்த கவிதை நூலுக்கான விருது, தேசிய அரச சாஹித்திய விருது, சிரித்திரன் சுந்தர் நினைவு விருது, முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருது, தமிழியல் விருது ஆகிய விருதுகளையும் இலக்கியச் சாகரம், கவித் தாரகை ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61601).