11915 மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன்.

எச்.எச்.விக்கிரமசிங்க (புனைபெயர்: மாத்தளை செல்வா). கொழும்பு 13: பெ.சந்திரசேகரன் நினைவுக்குழு, 39-21, அல்விஸ் பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxii, 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1.1.2010இல் மாரடைப்பினால் மரணமாகிய மலையகத்தின் அரசியல்வாதியான பெரியசாமி சந்திரசேகரன் பற்றிய வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரான பெ.சந்திரசேகரன் மலையக மக்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்காகப் பெரிதும் பாடுபட்ட ஒரு சமூகப் போராளியாகக் கருதப்பட்டவர். மலையக மக்கள் முன்னணி (Up-Country People’s Front) இலங்கையில் இயங்கிவரும் அரசியல் கட்சியும் தொழிற் சங்கமுமாகும். இது பொதுவாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஏற்பட்ட தலைமைத்துவ சிக்கல் காரணமாக இ.தொ.கா.விலிருந்து விலகிய பெ.சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். இறுதி வரையிலும் அவரே அதன் தலைவராகவும் இயங்கினார். இந்நூலில் மாத்தளை செல்வா அவர்கள் அமரர் சந்திரசேகரன் பற்றிய ஈழத்தின் பிரபல அரசியல்வாதிகள், புத்திஜீவிகளின் கருத்துக்களைக் கட்டுரைகளின் உருவில் பெற்றுத் தொகுத்து வழங்கியிருக்கிறார். நிமல் சிறிபால டி சில்வா, ரணில் விக்கிரமசிங்க, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, சி.பி.ரத்நாயக்க, கரு ஜெயசூரிய, தினேஷ் குணவர்த்தன, ரவூப் ஹக்கீம், பசில் ராஜபக்ஷ, முருகேசு சந்திரகுமார், மாவை. சோ. சேனாதிராஜா, பெருமாள் ராஜதுரை, பழனி திகாம்பரம், திஸ்ஸ வித்தாரண, சி.ஸ்ரீதரன், பிரபா கணேசன், காமினி விஜித் விஜயமுனி சொய்சா, ஜெ.ஸ்ரீரங்கா, வீ.இராதாகிருஷ்ணன், ஆர் யோகராஜன், அல்ஹஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், தயாசிறி ஜயசேகர ஆகிய அரசியல் பிரமுகர்களுடன், பேராசிரியர் சோ.சந்திரசேகரன், எம்.வாமதேவன், என்.எம்.அமீன், எச்.எச்.விக்கிரமசிங்க, மு.நித்தியானந்தன் (லண்டன்), சாந்தினி சந்திரசேகரன் ஆகியோரும் அமரர் பெ.சந்திரசேகரன் பற்றிய தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

16554 பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்.

எஸ். நளீம். வாழைச்சேனை-5: மைநா வெளியீடு, இல. 5, மஹ்முத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சாய்ந்தமருது: எக்சலன்ட் பிரின்ட்). 90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15.5 சமீ.,