ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, மே 2014. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14.1 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
viii, 57 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 160., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-06359-8-6.
கரம்பொன் மண தந்த தனிநாயகம் அடிகளாரின் வாழ்வும் பணிகளும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வண. சேவியர் தனிநாயகம் அவர்கள் (2.8.1913-1.9.1980) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் உட்பட உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர். பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார். Tamil Culture என்னும் ஆங்கில ஆய்விதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். தனிநாயகம் அடிகளார் ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அடிகளாரது தந்தை நாகநாதன், மற்றும் அவரது தந்தைவழிப் பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார். தனது தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் பல்வேறு மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். பின்னாளில் பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 239493).