11972 வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்.

சுஜப்  எம்.காசிம். கொழும்பு 10: சுஜப்  எம்.காசிம், இஷாபா (Ishafa) பதிப்பகம், B1/G1, மாளிகாவத்தை தொடர்மாடி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: IMIS Creations).

(5), 93 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-7735-00-9.

1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வடபுலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் துயர வரலாற்றையும் மீள்குடியேற்றம் தொடர்பான இன்றைய யதார்த்த நிலைமையையும்  இந்நூல் 34 கட்டுரைகளில் பதிவுசெய்திருக்கிறது. கால்நூற்றாண்டுக் காலமாகக் கண்ணீரும் கம்பலையுமாக காலம்தள்ளும் ஒரு சமூகக் குழுமம் தமது பிறந்தகத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட துயர வரலாறு உணர்வுபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மீள்குடியேற்றப்பட்ட நடவடிக்கைகளை இந்நூல் பதிவுசெய்துள்ளதோடு மீள்குடியேற்றத்தில் அக்கறை கொண்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உள்ளது. சமீப காலமாக நாடுதழுவிய சர்ச்சையை உருவாக்கிய வில்பத்து குடியேற்ற விவகாரம் பற்றிய உண்மையை இந்நுலின் பல கட்டுரைகள் விபரிக்கின்றன. அதேவேளையில் பொதுபலசேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பின் விஷமப் பிரச்சாரங்களையும் ஆசிரியர் கேள்விக்குள்ளாக்குகின்றார். மன்னார், விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக்கொண்ட சுஜப்  எம். காசிம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர். தற்போது தினகரன் வார மஞ்சரியின் இணை ஆசிரியராகப் பணிபுரிபவர். அவ்வப்போது தான் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இதனை வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்