மலர்க்குழு. சுன்னாகம்: வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).
xxx, 288 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
01.10.2014 அன்று தனது ஐம்பதாண்டு அகவையைப் பூர்த்திசெய்யும் சுன்னாகம் பொது நூலகத்தின் நினைவாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. 1964ஆம் ஆண்டு சுன்னாகத்தில் இடம்பெற்ற சாஹித்திய விழாவிலே கால்கோளிடப்பட்டவாறு, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நெவில் ஜெயவீர அவர்களால் காங்கேசன்துறை வீதியிலிருந்த ஆயுர்வேத வைத்தியர் தம்பையா அவர்களது வீட்டில் சுன்னாகம் நூலகம் திறந்துவைக்கப்பட்டது. பின்னர் பதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 18.01.1973இல் நாட்டப்பட்டது. இதற்கான காணி, மாவட்ட நீதிபதி வி.மா.குமாரசாமி அவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. சுன்னாகம் நூலகத்தின் ஐம்பதாண்டு வரலாற்றை இம்மலர் தனது முற்பகுதியில் விபரமாகப் பதிவுசெய்துள்ளதுடன், தொடர்ந்து வரும் பகதிகளில் நூலகத்துறை சார்ந்ததும் நூலியல்துறை சார்ந்ததுமான பல்வேறு கட்டுரைகளை அத்துறைசார் ஈழத்து நூலக அறிஞர்கள்மூலம் எழுதுவித்து, இம்மலரில் பதிப்பித்துள்ளனர். நூலகவியல்துறை சார்ந்த நூல்களுக்குத் தமிழில் தட்டுப்பாடுள்ள இவ்வேளையில் இம்மலரின் கட்டுரைகள் நூலகவியல்துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.