10118 திருமால் வழிபாடு.

வை.பெ.கிருஷ்ணசாமி பிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: ஜுப்பிட்டர்ஸ் ஜவுளி மாளிகை, 194, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1972. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 19×11.5 சமீ.

இந்நூல் கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் 29.1.1972 சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீமந் நாராயணன் நாமாவளி பஜனையின் ஞாபகார்த்தமாக கோவிந்தா நாமாவளி என்றழைக்கப்படும் இந்நூல் மேற்படி ஆலயத்தில் வைத்து ஸ்ரீமத் சுவாமி வருணானந்தா அவர்கள் முன்னிலையில் இலவசமாக அன்பர்களுக்கு வழங்கப்பட்டது. திருமால் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாகவும் திருமால் அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். சந்திர குலமான யது குலத்தில் பிறந்த திருமால் இவ்வுலகை விட்டு பிரிந்தவுடன் அம்மக்கள் இவரை நடுகல் வைத்து வணங்கினர். நாளடைவில் அதுவே திருமால் வழிபாடாக அமைந்தது. திருமால் சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளன. பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது. மச்சபுராணம், வாமனபுராணம் என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன. மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராகப் புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3058).

ஏனைய பதிவுகள்