கண்டாவளைக் கவிராயர் (இயற்பெயர்: சி.கு.இராசையா). கிளிநொச்சி: திருநெறிக் கழகம், அமுத சுரபி, முரசுமோட்டை, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம், கனகபுரந்தெரு).
(4), xx, 60 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 20×15 சமீ.
கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த சி.கு.இராசையா கண்டாவளையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். கரவெட்டி திரு இருதயக் கல்லூரி, சாவகச்சேரி றிபேர்க் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, 1956இல் ஊரியான் கிராம அதிகாரியாகவும், 1963 முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமசேவையாளராகவும் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் புராண இதிகாசச் சம்பவங்கள் மூலம் முருகன் பெருமை, பிள்ளையார் பெருமை என்பவற்றையும், வன்னிப்பிரதேச வளத்தையும், பண்பாட்டையும் பள்ளுப்பிரபந்தமாக இந்நூலில் பாடியுள்ளார். வன்னியின் வயற் பண்பாட்டையும், ஆறு, குளம், நிலம், மண், மக்கள் ஆகிய வளங்களையும், வன்னியின் வரலாறு, சமகால அரசியல், சமயம், விவசாயம், விடுதலைப் போராட்டம் முதலானவற்றையும் இங்கு எடுத்துக்காட்டுகின்றார். கரைச்சிப் பள்ளு, கோணகுள விநாயகர் திருப்பள்ளி எழுச்சி, கோணகுள விநாயகர் மீது பாடிய வினையறு பதிகம், கோணகுள விநாயகர் திருவூஞ்சல், முருகவேள் மீது பாடிய ஊழறு பதிகம் ஆகிய பிரதான தலைப்புக்களில் இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50820).