M.A.M. சுக்ரி. மாத்தறை: தாருல் புஷ்ரா வெளியீடு, 61, ராகுல வீதி, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 6: யுனிக், பிளாசா கொம்பிளெக்ஸ், வெள்ளவத்தை).
106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
ஹதீஸ் என்பது முகம்மது நபியின்(ஸல்) சொல், செயல், தீர்ப்புக்கள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகள் என்பனவற்றைக்கொண்ட நபிமொழிகளின் தொகுதியாகும். இறைதூதர்களுள் இறுதியானவராக இஸ்லாமியரால் கருதப்படும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு 6666 வசனங்களைக் கொண்ட திருக்குர் ஆன் வழங்கப்பட்டது. அந்தக் குர்ஆனை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்திக்காட்டிய முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சொல், செயற்பாடுகள், அனுமதித்த, அனுமதிக்காத, அங்கீகரித்த அனைத்தும் அவரது தோழர்கள், மனைவியர் மற்றும் அவர்காலத்தில் வாழ்ந்தவர்களால் மனதளவில் பதியப்பட்டுப்பின் சொல்வழக்கில் இருந்தன. பின்னர் வாழ்ந்த ஹதீஸ் தொகுப்பாளர்கள் அவற்றைப் பேச்சுவழக்கிலிருந்து மீட்டுத் தொகுத்து ஆவணப்படுத்தினார்கள். இந்நூல் அந்த ஹதீஸ்கள் பற்றியதொரு வரலாற்றைப் பதிவுசெய்கின்றது. இஸ்லாமிய சட்டவாக்கத்தில் ஹதீஸினதும் ஸ_ன்னாவினதும் பங்கு, ஹதீஸ_ம் நபித்தோழர்களும், ஹதீஸ்களின் பாதுகாப்பிற்கு ஸஹாபாக்களின் பங்களிப்பு, ஸஹாபாக்கள் கால ஹதீஸ் தொகுப்புகள், ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு, தஹம்முல் அல் இல்ம்-ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்ட வழிமுறைகள், ஹதீஸ்களும் இஸ்னாதும், ஹதீஸ் விமர்சனம், ஹதீஸ_ம் கீழைத்தேயவாதிகளும் ஆகிய எட்டுத் தலைப்புகளின்கீழ் ஹதீஸ் வரலாறும் முக்கியத்துவமும் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 128894).