உடப்பூர் வீர சொக்கன். உடப்பு: தேசகீர்த்தி உடப்பூர் வீர சொக்கன், உடப்பு இளம் தாரகை வட்டம், 3ம் வட்டாரம், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (புத்தளம்: செரண்டிப் பிரிண்டர்ஸ்).
80 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
ஏறக்குறைய 350 வருடகாலச் சிறப்பைக் கொண்டது புத்தளம் மாவட்டத்தில் உள்ள உடப்பங்கரை என்ற பூர்வீகப் பெயரைக்கொண்ட உடப்பூர் கிராமம். இக்கிராம மக்களிடையே பலதரப்பட்ட தெய்வ வழிபாடுகள் காணப்பட்டாலும் திரௌபதை வழிபாடு அவற்றுள் முதன்மை பெற்று விளங்குகின்றது. தொழில்முறைகளுக்கும் சிறுதெய்வ வழிபாடுகளுக்குமிடையே உள்ள தொடர்புகள் உடப்பின் தனித்துவமானதொரு பரிமாணமாகும். திரௌபதை அம்மன் வழிபாடும் வீரச் செறிவுடன் இணைந்த ஒரு தமிழ்ப் பண்பாட்டின் துலக்கமாகின்றது. அங்கு பின்பற்றப்படும் காளியம்மன் வழிபாட்டிலும்; வீரமும் காவலும் இணைந்துள்ளன. பண்பாட்டின் ஒவ்வோர் அடிநிலை அலகுகளையும் மிக நுணுக்கமாக இந்நூலில் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார். உடப்பு பண்பாட்டில் நாட்டாரியலின் தனித்துவம், பார் போற்றும் திரௌபதை, உடப்புக்கு வந்தடைந்த மக்களின் திரௌபதை வழிபாடு, திரௌபதையம்மன் எச்சரிக்கை, பதினெட்டு நாள் போர், பாரதக் கும்மி, திரௌபதி காவியம், உடப்பின் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காற்றின் பண்புகள், சிறுதெய்வ வழிபாடு, உடப்பில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் சித்திரை செவ்வாய், இலங்கையில் தொன்மையும் சிறப்பும் கொண்டது திரௌபதையம்மன் வழிபாடு, இரட்டை மல்லி ஆகிய 13 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.