சிசு நாகேந்திரன். அவுஸ்திரேலியா: கேசி தமிழ் மன்றம், மெல்பேர்ண், 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xi, 578 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
மலையகத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தில் வளர்ந்து இன்று புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் நூலாசிரியர் புகலிட வாழ்வில் லண்டனில் ஒன்பது ஆண்டுகளும், அவுஸ்திரேலியாவில் 21 ஆண்டுகளுமாக மொத்தம் 30 ஆண்டுகளைக் கழித்தவர். கலைவளன் சிசு நாகேந்திரன் அவர்கள் கடந்த நான்காண்டுகளாகத் தேடிச் சேகரித்து வைத்திருந்த 18000 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலப் பதங்களுடன் இவ்வகராதியைத் தொகுத்திருக்கிறார். சாதாரண தமிழ் ஆங்கில அகராதிகளிலிருந்து இந்நூல் வேறுபடுவதற்குக் காரணம், சமகால புகலிட வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான அர்த்தங்களை ஆங்கிலத்தில் தந்திருப்பதேயாகும். அகதி அந்தஸ்து, அகதிகள் ஆணையகம், அகதிகள் ஆதரவு வலயம், பதுங்குகுழி, கிரந்திப் புண், பம்மாத்து, நினைவஞ்சலி என்று நாம் அன்றாடம் பாவிக்கும் இன்னோரன்ன பல சொற்களை இவ்வகராதியில் காண முடிகின்றது.