இராசேஸ்வரி ஈஸ்வரஞானம். இங்கிலாந்து: திருமதி இராசேஸ்வரி Flat 3, Hastings Court, 5, Parkhurst Road, Sutton, SM1 32 வது பதிப்பு, ஐப்பசி 2012, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (லண்டன்: நெட் பிரின்டர்ஸ்).
78 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டியில் பிறந்த நூலாசிரியை வட இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியத்துவப் பயிற்சிபெற்று வர்த்தகத்துறையில் ஆசிரியையாக கொழும்பு விவேகானந்த மகாவித்தியாலயத்திலும், யாழ்.கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியிலும் பின்னர் திருக்கோணமலை மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1995இல் ஓய்வுபெற்றபின்னர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வருகிறார். 1997இல் தனது கணவருக்கு ஏற்பட்ட பக்கவாத நோய்க்கான சிகிச்சை வழங்கும் நோக்கில்Reflexology என்ற பிரதிபலிப்பு முறையில் லண்டனில் பயிற்சிபெற்றுத் தேர்ந்து தன் துணைவரின் நோயைக் குணப்படுத்தியதுடன் அத்துறையில் மேலதிகப் பயிற்சிபெற்று அத்துறையிலேயே பணியாற்றியவர். சுகமான வாழ்வுக்கு சுலபமான பயிற்சிகள் என்ற இறுவட்டு, மெய்ஞானி திருமூலர் கண்ட சுகவாழ்வு (2013), அறநெறிக்கதைகள் (2014) ஆகிய இரு நூல்கள் என்பன இவரது படைப்புக்களாகும். லண்டனிலும் சட்டன் தமிழ்ப் பாடசாலையில் தமிழும் சைவமும் போதித்து வந்தவர். பிரதிபலிப்பு மருத்துவக் கலையை இந்நூலின் வாயிலாக எளிமையாக ஆசிரியை விளக்குகின்றார். மனிதனின் பழக்கவழக்கங்கள் மாறியமையால் மாத்திரைகளை மருந்தாக ஏற்கும் நிலை ஏற்பட்டது. இயற்கையோடு இயைந்த வாழ்வை இந்நூல் போதிப்பதன்மூலம் மருத்துவத் தேவையற்ற ஒரு வாழ்வை எதிர்காலத்தில் மக்கள் அனுபவிக்கவேண்டும் என்பதே ஆசிரியரின் அவாவாகவுள்ளது. நம்முன்னோர் காது மூக்கு குத்தியதையும், மெட்டி அணிந்ததையும், கோவிலிலும், பள்ளியிலும் தோப்புக்கரணம் போடவைத்ததையும் நோயற்ற வாழ்விற்கான வழிமுறைகளாகக் காண்கிறார். தன் கருத்துக்களை பிரதிபலிப்பு முறை (Reflexology), தேய்த்தல் (Massage), மகிழ்வுடன் வாழ்தல், உணவு, தானியங்கள், பழங்கள், கீரைவகைகள், காய்கள் கிழங்குகள், சரக்கு வகைகள், விதைகள், மலர்கள், இங்கு (லண்டனில்) கிடைக்கும் மரக்கறிகள், சிறந்த பத்து உடற்பயிற்சிகள் என்று 13 இயல்களில் விளக்கியுள்ளார்.