சிவயோகர் சிறுவர் பாடசாலை. கனடா: சிவயோகர் சிறுவர் பாடசாலை, ஸ்கார்பரோ, 2வது பதிப்பு, 2007, 1வது பதிப்பு விபரமில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
27 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களினால் பாடப்பெற்று ஒலிப்பேழையாக வெளிவந்துள்ள பாடல்களின் எழுத்துவடிவம் இந்நூலில் உள்ளடங்கியுள்ளது. சிவ சிவ ஓம் ஓம், எங்கள் குருநாதன், இணையடி வாழ்க, அணிகலன்கள், ஏத்துக பொன்னடி என இன்னொரன்ன 32 தலைப்பகளிலான யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிவயோக சுவாமிகள் (1872-1964) ஈழத்தில் வாழ்ந்த சைவத் துறவியும் திருக்கயிலாய பரம்பரையில் நந்திநாத சம்பிரதாயத்தில் வந்த குருபரம்பரையின் 161ஆவது சற்குருவுமாவார். யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில், மே 29, 1872இல் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் மேற்படிப்பும் கற்றார். கல்வி முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராகப் பணியில் இணைந்து, கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார். கொழும்புத்துறையில் ஆச்சிரமமொன்றமைத்த அவர், இலங்கையெங்கணும் யாத்திரை சென்று, நற்சிந்தனைகளை வழங்கிவந்தார். மார்ச் 1964ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் அமரத்துவமடைந்தார். செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய அருள் வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். யோகர் சுவாமிகள் பாடிய பாடல்கள், கவிதைகள், அருண்மொழிகள் என்பன, அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்போரால் தொகுக்கப்பட்டு, ‘நற்சிந்தனை’ எனும் நூலாகவும், ஆங்கிலத்தில் ‘The Words of Our Master’ என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நற்சிந்தனைகளே சிறுவர்க்கேற்ற வகையில் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன.