10421 படைப்போம் பாடுவோம்.

தில்லைச்சிவன். (இயற்பெயர்: தி.சிவசாமி). வேலணை: செந்தமிழ்ச் செல்வி வெளியீட்டகம், கூடல், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 289, ½ காலி வீதி).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 70., அளவு: 22×18 சமீ.

சிறுவர் தங்களது சொல்வளத்தைப் பெருக்கவும் இசையுடன் பாடவும் பொருளறிந்து நயக்கவும் எனப் புனையப்பெற்ற 31 தலைப்புகளில் அமைந்த பாடல்கள். சரவணையில் பிறந்த அமரர் தி.சிவசாமி பன்முக ஆளுமை கொண்டவர். பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும் அவர் விளங்கினார். ஆசிரியராக, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக, சமூக சமய மேம்பாடுகளுக்காக உழைத்தவராக விளங்கியவர். தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். மறுமலர்ச்சிக் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தி பல சமூகப் பணிகளை ஆற்றியவர். கவிஞர் தில்லைச்சிவன் வேலணை வாழ் மக்கள் பலரின் வாழ்க்கைச் சுவடுகளை கவிதையாக்கி வரலாறாக்கியவர். தீவகத்திலுள்ள உள்ள அனைத்துக் கோவில்கள் பற்றியும், அத்தெய்வங்களின் புகழ் பற்றியும் கவிதை புனைந்துள்ளார். இவரது கவிதைகளில் சில நூல்களாக வெளிவந்துள்ளன. ‘அந்தக் காலத்துக் கதைகள்’ எனும் நாட்டில் நிலவிய மரபுவழிக் கதைகளை இலக்கியமாக்கிய இவரது பணி ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதுவரவு. வெளிவந்த தில்லைச்சிவன் அவர்களின் நூல்கள் வருமாறு : கனவுக்கன்னி (1961), தாய் (1969), ஐயனார் அருள்வேட்டலும் திருவூஞ்சலும் (1972), தில்லை மேடைத்திருப்பாட்டு (1974), பாப்பாப் பாட்டுக்கள் (1985), நான் (1993), வேலணைத் தீவுப்புலவர்கள் வரலாறு (1996), தாழம்பூ (1996), அந்தக்காலக் கதைகள் (1997), நாவலர் வெண்பா (1997), பூஞ்சிட்டு (பாப்பா பாட்டு) (1998), தில்லைச்சிவன் கவிதைகள (1998), வேலணைப் பெரியார் கா.பொ.இரத்தினம் (2000), ஆசிரியர் ஆகினேன் (2000), காவல் வேலி (2003), தந்தை செல்வா காவியம் (2004). தில்லைச்சிவன் ஆசிரியராக, எழுத்தாளராக, கவிஞராக, சமூக சேவையாளராக, சமயப்பணி புரிந்தவராக, கிராமியக் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்தவராக விளங்கியதோடு சமூகத்தை நிறுவனமயப்படுத்தி சமூக மேம்பாட்டைக் காணவேண்டுமென்ற சிந்தனையையும் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40261).

ஏனைய பதிவுகள்