சிட்னி மாகஸ் டயஸ், (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2015. (கணேமுல்ல: ஜயன்; பிரின்ட் கிராப்பிக்ஸ், 51, ஏ/1, கல்ஹிடியாவ).
36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1848-83-5.
இந்தப் படைப்பு, சமூக ஒருமைப்பாட்டைச் சுற்றிச் சுழலும் ஒரு நாடகப் பிரதியாகும். உண்மையை வெளிப்படுத்தல், நியாயம் நிலைநாட்டப்படல், பரஸ்பரம் மன்னிப்பளித்தல், அன்புடைமை என்னும் நான்கு அடிப்படை ஒழுக்கவியல் கூறுகளின் ஒன்றிணைப்பின் மூலம் தமிழ்-சிங்கள ஒருமைப்பாட்டைப் பேணலாம் என்று கூறும் கருத்தியலைக் கொண்டது. சிரிமல்- ரமேஷ் ஆகிய இரு நண்பர்களிடையேயான இனம் மொழி கடந்த ஆழமான நட்பு, வியாபாரி ஒருவனால் கேள்விக்குள்ளாகின்றது. அவர்களிடையே பகைமையை வளர்த்து இலாபம் சம்பாதிக்க அந்த வியாபாரி முனைகிறான். அயலவர்களும் அச்சண்டையால் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி இரண்டு பிரிவாகின்றனர். இறுதியில் உண்மை நிலைநாட்டப்பட்டு தெளிவு பிறக்கின்றது. இன்றைய இலங்கையின் இனப்பகையின் மூலாதாரப் பிரச்சினையை விளக்க முனையும் சிறுவர்களுக்கான கதை. மிருகக்காட்சிசாலை உரிமையாளர், வேலை ஒப்பந்தக் காரன், வேலையாள், வண்டிக்காரன் என கையளவு பாத்திரப்படைப்புகளுடன் இந்நாடகம் சிக்கலின்றி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10207).