ஒளவை. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600077: மணி ஓப்செட்).
86 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-94-3.
காதல் கவிதைகளுடன் தொடங்கும் ஒளவையின் இந்தத் தொகுதி கடந்துவிட்ட காலத்திற்கும் இனி கடக்கப்போகும் காலத்திற்கும் – வெறுமையும், அசைவும், இழப்பும் விழைவும் பின்னிப் பிணைந்துள்ள காலத்திற்கும் இடையிலான காத்திருப்பைப் பேசுகின்றது. போரின் அவலத்தையும், தாய்மையின் பரிவையும், சினத்தையும், ஆற்றாமையையும், இக்கவிதைகள் இணத்துப் பேசும் பாங்கு அலாதியானது. கடந்தகால அரசியற் கனவின் சேதாரங்களுடன் இலங்கையில் தொடர்ந்துவாழ வேண்டிய நிர்ப்பந்த சூழலில்தான் அவர் முதலில் எழுதினார். இவ்வகையில் அவர் எழுதிய தருணங்களும், எழுதாத, எழுத இயலாத தருணங்களும் முக்கியமானவை. இவற்றைக் கருத்திற்கொண்டு அவரது கவிதைகளை வாசிப்போருக்கு அவரது பயணம் புரிபடும். ஈழத்தின் முதுபெரும் கவிஞர் மகாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் மகளும், கவிஞர் சேரனின் சகோதரியுமான ஒளவை விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் பட்டம் பெற்றவர். கல்வியியல் துறையலும் பட்டம் பெற்றவர். நீண்டகாலம் இலங்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்து தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். இவரது முன்னைய நூலான ‘எல்லை கடத்தல்” இலங்கையில் 2000ஆம் ஆண்டில் வெளியாகியது.