கு.றஜீபன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்).
63 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-77-9.
கவிதை எமது உடலின் அந்தரங்கமான ஒரு நரம்பின் அதிர்வு. பேரழிவையும் பெருந்துயரையும் கவிதைகளில் சொல்வதென்பது ஒரு சின்னச்சிட்டு தன் மெல்லிய இறகால் புயலை அறிவது போல. ஆகவே கவிதைகள் மிக நுட்பமாக ஒரு வழியைக் கண்டடைகின்றன. சிட்டுக்குருவி தன்மரப்பொந்தின் இடுங்கலான இருண்ட ஆழத்துக்குள் சென்று சிறகுகளை இறுக்கிக்கொண்டு கண்மூடி ஒடுங்கிக்கொள்கின்றது. அதன் மெல்லிறகின் சலனத்தால் அங்கே நுழையும் புயலை அது அறிகின்றது. இத்தொகுப்பிலுள்ள றஜீபனின் கவிதைகளை வாசிக்கும்தோறும் அவரது மேற்கூறப்பெற்ற வாசகங்கள் மனதில் நிழலாடவே செய்கின்றன. ஒரு பெருந்துயரம் என்ற பகுதியில் தோற்றுப்போன கனவுகளும் மீளமுடியா பெருந்தயரும் என்ற கவிதை முதல் வலிகள் சுமந்ததான வாழ்தல் என்ற கவிதை ஈறாக 11 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இலையுதிர்காலம் என்ற இரண்டாவது பகுதியில் எமக்கான இருள் என்ற கவிதையில் தொடங்கி உனது பல்லக்கு என்ற கவிதை ஈறாக 23 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. துளிர்ப்பு இன்ற மூன்றாவதும் இறுதியுமான பகுதியில் விடிவு முதல் வேரிலிருந்து ஈறாக ஏழு கவிதைகள் இடம்கொண்டுள்ளன. அனைத்தும் இதயத்தைக் கனக்கச் செய்யும் சக்திமிக்க வரிகள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56527).