அகமது ஃபைசல். வாழைச்சேனை-5: காகம், மஹ்மூட் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி).
96 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-4644-15-1.
தமிழ்க் கவிதைச் சூழலுக்குப் பரிச்சயமற்ற கவிதைப் பிரதிகளை அறிமுகப்படுத்தும் பரீட்சார்த்த-துணிச்சல் மிக்கவராக அகமது ஃபைசல் ஈழத்து இலக்கியச் சூழலில் இனம்காணப்படுகின்றார். இவரது முதலாவது தொகுப்பு ‘ஆயிரத்தோராவது வேதனையின் காலை’ என்ற தலைப்பில் 2006இல் மூன்றாவது மனிதன் வெளியீடாகவும், இரண்டாவது தொகுப்பு ‘நிலத்தோடு பேசுகிறேன்’ புது எழுத்து வெளியீடாக 2012இலும் வெளிவந்திருந்தன. இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி. மூன்று தொகுப்பிலும் மூன்று விதமான கவிதைச் செயற்பாட்டினை சோர்வின்றி இவரால் மேற்கொள்ளமுடிந்துள்ளது. ‘கவிதையை வரையறுக்கும் செயற்பாடு தன்னிடம் அதிகாரத்தடன் கூடிய ஒரு சிக்கலையும் கொண்டிருக்கிறது. கவிதையை வரையறுக்கும் செயலுக்கிருக்கும் உரிமையை ஏற்கவோ,மறுக்கவோ வேண்டியதில்லை. மாறாக, பல போக்குகளைக் கொண்ட கவிதைகளை அங்கீகரிப்பதே சரியானதாகும்’ என்பது அகமது ஃபைசலின் கோரிக்கையாக உள்ளது. கவிதைக் கட்டுடைப்பொன்று இங்கே சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. நூலின் தலைப்புப் பற்றிய புரிதலும் உள்ளடக்கத்திற்கான கட்டியம் கூறுதலாக அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54402).