அழ.பகீரதன். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 2வது பதிப்பு, மே 2017, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). (2), 40 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38214- 0-9. தேசிய கலை இலக்கியப் பேரவை பல்வேறு கவிஞர்களினதும் எழுத்தாளர்களினதும் அறிஞர்களினதும் கட்டுரை, சிறுகதை, கவிதை நூல்களை தமிழகத்திலும், கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் பதிப்பித்து வெளியிட்டுவரும் பாரம்பரியத்தைக் கொண்டது. இக் கவிதைத் தொகுதி இப்பேரவையின் ஐந்தாவது வெளியீடாக 1997இல் வெளிவந்தது. சுன்னாகம் இலங்கை வங்கியில் எழுதுவினைஞராகப் பணியாற்றியவர் அழ.பகீரதன். 1988இலிருந்து 1997 வரை இவர் எழுதிய கவிதைகளில் தேர்ந்த சிலவற்றை இத்தொகுப்பில் சேர்த்துள்ளார். அக்காலகட்ட யாழ்ப்பாணச் சமூகச் சூழலை இதிலுள்ள கவிதைகள் பிரதிபலிக்கின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளைப் படிக்கும்வேளை அவற்றைக் கூட்டு முயற்சி என்று கொள்வதற்கு சில காரணங்கள் உண்டென்று இந்நூலுக் கான தனது அணிந்துரையில் கூறும் கவிஞர் முருகையன் இவற்றுட் பல, நிகழ்கால நடப்புகளின் விமரிசனமாக உள்ளதெனவும், இவை சமூக நடத்தைகளையிட்டு கருத்துரை கூறுவதுடன் வினாக்களையும் எழுப்புகின்றன என்கிறார். நெருக்கமான தனிமனித உறவுகளின் ஓவியமாய்த் தோற்றங் காட்டும் உணர்வுகள் கூட, பொதுமையான அக்கறைகளின் பரிமாணங்களை உள்ளடக்குமாறு இந்தப் படைப்பகள் உருவாக்கம் பெற்றுள்ளன என்கிறார்.