10644 வெளிச்சம் காணாத விழிகள்.

பிபிலை நா.ஜெயபாலன். பிபிலை: நா.ஜெயபாலன், இல.14, தும்பல் ஏறுவ, வேகம, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி).

ii, 121 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

பதுளை,ஹொப்டனைப் பிறப்பிடமாகக்கொண்ட மலையக இலக்கியவாதியான பிபிலை நா.ஜெயபாலனின் 44 கவிதைகளின் தொகுப்பு. இவற்றில் 20 கவிதைகள் மலையக வாழ்வினையும், ஏனையவை பிற பிரதேசங்களையும் களமாகக் கொண்டவை. தமிழ்ப் பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்கள், தற்கால அரசியல், சமூகப் பொருளாதார நிகழ்வுகள் ஆகியவை இவரின் கவிதைகளின் பாடுபொருள்களாக அமைந்துள்ளன. ‘இனிய இளவலே எழுந்து வாடா’ என்ற கவிதையை ஒத்த கவிதைகளில் தான் சார்ந்த மலையகச் சமூகத்தின் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியேற்றிவைக்கும் உணர்வு காணப்படுகின்றது. மேலும் ‘நானும் புதைவேன்’ போன்ற சில கவிதைகள் மலையகத்துக்கு அப்பால் ஈழத்தமிழரின் இன்னல் துடைக்கும் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கின்றன. கவிஞரின் தம்பியான அதிபர் நா.இளங்கோவின் மறைவையொட்டி இவர் எழுதிய ‘புகழுடல் விட்டுப் போனாயே’ என்ற கண்ணீர் வரிகள் நூலின் இறுதிக் கவிதையாக அமைந்துள்ளது. இவரது சில கவிதைகள் போரின் அவலங்களையும் போருக்குப் பின்னரான மக்களின் அவலங்களையும் பேசுகின்ற அதே வேளை, வலியுடன் வாழ்வோரின் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும்  வகையிலும் அமைந்துள்ளன. 1980களில் இலக்கிய உலகில் பிரவேசித்த கவிஞர் ஆரம்பத்தில் சிறுகதைகளிலும் நாடகங்களிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர். பின்னாளில் கவிதைத்துறையிலும் தன் திறமையைக் காட்டிவருபவர். ‘மழை காணாத மலை’ என்ற கவிதைத் தொகுப்பின் பின்னர் வெளிவரும் இரண்டாவது கவிதைத்தொகுப்பு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்