10666 எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.

பாலமுனை பாறூக். பாலமுனை 3: பர்ஹாத் வெளியீட்டகம், 14, பர்சானா மன்சில், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ல்ட்).

88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-99311-3-3.

உண்மையின் தரிசிப்பிலிருந்து உருவாவதே உயிரிலக்கியம் என்ற கருத்துக்கமைவாக நெடுங்கவிதையாக, குறுங்காவியமாக உருவாகியிருப்பதே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு. போர்க்கால வாழ்வியலை, ஒரு பொதுமகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ஆரம்பிக்கும் இக்காவியம், போருக்குப் பிந்திய வாழ்க்கை முறைமையையும் சிறுபான்மையினரான தமிழரும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல, இணைந்து பிணைந்து ஒரு தாய் பிள்ளைகள் போல நெருக்கமாக வாழ்ந்ததையும் பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளையும் இக்காவியத்தில் அழகாகக் கூறிச் செல்கின்றார். கல்முனைப் பிரதேசத்தின் படைப்பாளியும் நாடறிந்த எழுத்தாளருமான பாலமுனை பாறூக், பதம் (1987), சந்தனப் பொய்கை (2009) ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் கொந்தளிப்பு (2010), தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) ஆகிய குறுங்காவியங்களையும் வழங்கியவர். இவரது காவிய எடுத்துரைப்பு முறையில் இயற்கையின் பின்புல வர்ணனை, வாழ்வியற் சித்திர வார்ப்பு, காட்சிப் படிமங்களின் உருவாக்கம், வட்டாரச் சூழலை உள்வாங்கிய பதிவு, பேச்சு மொழி ஓசை நயம் ஆகிய இன்னோரன்ன  அம்சங்கள் பொலிவாக அமைந்துள்ளன. இனமுரண்பாட்டால் ஏற்பட்ட துயரச் செய்திகளை எடுத்துச் சொல்லும் இக்குறுங்காப்பியம் 13 அத்தியாயங்களைக் கொண்டது. கதாநாயகன் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதும் ஆயுதக் குழுக்களால் மனைவி மக்கள் அஞ்சியோடி வாழ்வதும் ஆட்கள் கடத்தப்படுவதும் அவர்களது விடுதலைக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்யும் மனித நேயமுள்ள ஒருவனாகக் கதாநாயகன் விபரிக்கப்படுகின்றான். பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் நீண்ட முகவுரை ஆசிரியரின் பல்வேறு காவியங்கள் பற்றிய மதிப்பீடாக அமைகின்றது.

ஏனைய பதிவுகள்