மருதூர் ஏ.மஜீத். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
xii, 13-120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-2754-2.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது சிறுகதைகளின் தொகுப்பாக இதை வெளியிட்டிருக்கிறார். கிராமப்புறம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை தனது கதைகூறும் ஆற்றலின் ஊடாக விளக்கமாகப் புரியவைக்கிறார். பெண்கள் படும் தொல்லைகளையும், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் சில கதைகளில் அழகாகப் படம்பிடித்துள்ளார். இந்நூலின் கதைகளின் தலைப்புகளும் வித்தியாசமானவை. கூடுகட்டத் தெரியாத குயில்கள், அபுல் காசிம் ஹஜியார் பட்டை தீட்டப்பட்ட வைரமாகிறார், இதயக்கோட்டையை இடித்த எஞ்சினியர், மங்கையொருத்தி மனைவியாகிறாள், தரையிலே கண்சிமிட்டும் தாரகைகள், மைமூன் நேற்று ஒரு பிள்ளைக்குத் தாயாகிவிட்டாள், பனித்துளி பட்டு கருகிய மொட்டு, வியாபார நுட்பம் தெரிந்த பீடாக்காரன், அவனது பட்டப்பெயர் நெருப்புத்தண்ணி, குருத்தோலையும் கறள் ஆணிகளும், ஒரு கதைஞனின் பம்மாத்துக் கதை, எதையெதையோ எண்ணியவாறு, கற்பு காணாமல் போய்விட்டதா? ஆகிய தலைப்புக்களில் 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. கூடுகட்டத் தெரியாத குயில்கள் என்ற தலைப்புக் கதையில் பரிசாரிக்குக் கீரையும் விற்று தன்னையும் விற்றுவிட்ட அவலநிலை காட்டப்படுகின்றது. எளிய நடையில் நல்ல உவமைகளுடன் ஆசிரியர் கதையை நடத்திச் செல்லும் பாங்கு கதைக்கு உயிரூட்டுகின்றது.