ப.ஆப்டீன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், இல. 675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
xviii, 19-168 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-30-5627-6.
மலையகத்தைப் பின்னணியாகக் கொண்டவரும் ஈழத்து மலாய் சமூகத்தைச் சேர்ந்தவரும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவருமான ப.ஆப்டீன் நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய 12 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியத் தொழில் புரிந்த ஆப்டின் தனது அனுபவங்களைக் கொண்ட 5 சிறுகதைகள், தான் பிறந்த மலையகச் சூழலைப் பின்னணியாக் கொண்ட 5 சிறுகதைகள், பல்துறைசார்ந்த ஏனைய கதைகள் என இதிலுள்ள அனைத்து கதைகளுக்கும் அடிநாதமாக ஒலிப்பது மானுட நேயமும் சமூக மேம்பாடும் தான். இக்கதைகள் ரோதைமுனி, இராஜநாயகம் மாஸ்டரின் இலட்சியம், மொட்டைப்பனை, மனச்சங்கமம், தெரிவு, சிதைவுகள், மையத்து முகம், ஊக்குவிப்புக்கள், ஒருவேளைச்சோறு, தகுதியான கலைஞர், கொங்காணி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. மக்களின் உழைப்பைச் சுரண்டும் அலுவலர் பற்றியதாக ரோதை முனி என்ற சிறுகதையும், இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளிடம் அல்லல் படும் ஒருவரின் நிலை பற்றித் தெரிவிப்பதாக தழும்பு என்ற சிறகதையும், மலையகச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த ஓர் உன்னத மனிதரின் நிலையை எடுத்துக்காட்டுவதாக இராஜநாயகம் மாஸ்டரின் இலட்சியம் என்ற சிறுகதையும், மலையகத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி எவ்வாறு பறிக்கப்படுகின்றது என்பதை கொங்காணி சிறுகதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.