சிவனு மனோஹரன். ஹட்டன்: சிவனு மனோஹரன், இல. 86, சைட் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 13: டிசைன் லாப், 190, ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை).
(8), 112 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 250, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0634-01-9.
ஒரு மணல்வீடும் சில எருமைமாடுகளும் என்ற சிறுகதைத் தொகுப்புடன் அறிமுகமாகியுள்ள எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. இச்சிறுகதைத் தொகுப்பில் மலையக மக்களின் வாழ்வை ஆவணப்படுத்தமுனையும் 17 கதைகள் இடம்பெற்றுள்ளன. ச(க்)தி கரகம் (ஞானம் 100ஆவது மலர்), கோடாங்கி (தினகரன் 19.9.2008), கூட்டாஞ்சோறு (தினகரன் 03.08.2008), நிமிர்வு (ஞானம் 2009), படர்(தா)மரை (புதினம்-சர்வதேச சிறுகதைப் போட்டி), பாப்பா புள்ள (செங்கதிர் மலையகச் சிறப்பிதழ் 2009), மட்டத்து கத்தி (தினக்குரல் 2.12.2007), புள்ளையார் பந்து (தினகரன் 5.4.2009), ஒரு அந்தப்புரத்தின் அந்தகாரம் (பூபாளராகங்கள் 2008), லயத்துக் குருவிகள் (அகிலம்- முதற் பரிசுக்கதை), காவி நிறத்தினிலே (தாயகம், 2009), தவளைகள் உலகம், பச்ச பங்களா, அம்மாயி (இருக்கிறம்), கருவுலகம் (ஞானம்), விட்டில்கள் (அகிலம்), இந்திரலோகத்தில் தோட்டக்காட்டான் (ஜீவநதி) ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமானவையும் பிரசுரிக்கப்படாதவையுமான 17 கதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. மலையகத் தோட்ட மக்களின் வாழ்வில் குறுக்கிடும் பல அம்சங்கள் கதைகளின் கருவாகின்றன. இவற்றில் ச(க்)தி கரகம், நிமிர்வு, பாப்பா புள்ள, மட்டத்து கத்தி, ஒரு அந்தப்புரத்தின் அந்தகாரம், அம்மாயி, விட்டில்கள் ஆகிய 8 கதைகள் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை அடிநாதமாகக் கொண்டவை. படர்தாமரை, கூட்டாஞ்சோறு, நிமிர்வு, லயத்துக் குருவிகள், தவளைகள் உலகம் முதலிய கதைகளில் சோக உணர்ச்சியே முனைப்பாக ஒலிக்கின்றது. மலையக மக்களின் பிரச்சினைகளை உள்நின்று, மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலைப் புரிந்து உண்மையின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்தவர்களுள் சிவனு மனோஹரனும் ஒருவர். சமுதாயப் பிரச்சினைகளைக் கோட்பாடாக விபரிக்காமல் பாத்திரப் படைப்புகளினூடாக அவற்றை வெளிக்கொண்டுவந்திருப்பது இச்சிறுகதைத் தொகுதியின் சிறப்பம்சமாகும். ஓவியர் என்.எம்.தங்கேஸ்வரனின் ஓவியங்கள் சிறுகதைகளுக்கு மெருகூட்டுகின்றன.