சௌந். லெனாட் லோறன்ஸோ. மட்டக்களப்பு: கதிரவன் கலைக்கழகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (களுதாவளை: மாருதி அச்சகம்).
63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
சிறுகதை எழுத்தாளர் லெனாட் லோறன்ஸோ எழுத்துலகிற்கு இந்நூலின் வழியாக அறிமுகமாகின்றார். நூலுக்காகவே எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் இதில் பிரசுரமாகியுள்ளன. சருக வேட்டி, தங்கை, பூசாரி, வட்டத்தோசை, மாண்டவன், மே தினம், பொய், கட்டாயக் கல்வி, குரு-சிஷ்யன், எதிர்வினை ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. நூலின் தலைப்புக் கதையின் நாயகன் ஓர் ஆசிரியன். முதல் நியமனம் ஹட்டனில் கிடைக்கின்றது. அதே பாடசாலைக்கு கலைச்செல்வி என்ற ஆசிரியையும் புதிதாக வந்து சேர்கிறாள். இருவருக்குமிடையில் மலரும் காதல் இருவராலும் வெளிக்காட்டப்படாமல் மனதளவில் தேங்குகின்றது. பரிசுப்பொருட்கள் மட்டும் பரிமாறிக்கொள்கின்றார்கள். அவ்வகையில் அவனுக்கு அவள் வழங்கிய சருகை வேட்டியினுள் மறைத்து வழங்கிய காதல் கடிதத்தை அவன் வாசிக்காமலேயே இருவரும் பிரிகின்றனர். நீண்ட காலத்தின் பின்னர் சருகைவேட்டியை திறந்து பார்க்கிறான். கடிதமும் காதலும் வெளிப்படுகின்றது. இத்தகைய செயற்கைத் திருப்பங்களுடனான கதைகளே தென்னிந்திய தமிழ்த் திரைப்படக் காட்சிப் படிமங்களையொத்ததாக இவரது கதைகளில் தூக்கலாக இருக்கின்றன.