வவுனியூர் இரா.உதயணன். கொழும்பு 6: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம், 9-2/1, நெல்சன் இடம், 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி).
xii, 330 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-7938-00-4.
வீரகேசரி வார இதழில் 54 வாரங்களாகத் தொடர்ந்த ஒரு தொடர்கதை நுலுருவில் வெளிவந்துள்ளது. போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வன்னி மண்ணில் நடந்தேறி வருகின்ற அவலங்களுடனான வாழ்க்கைக் கோலங்களை இந்த நாவல் யதார்த்தமாகப் பேசுகின்றது. யுத்தம் தீவிரமடைந்திருந்த வேளையில் வன்னி மண்ணிலிருந்து வெளியேறி லண்டனுக்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்த பிரவீன் என்னும் இளைஞன் 15 ஆண்டுகளுக்குப் பின் யுத்தம் முடிவடைந்த வன்னி மண்ணைத் தரிசிக்கிறான். தனது சிறுபராயத்தில் செழிப்புற்று பல வளங்களுடன் இருந்த வன்னிப் பூமி பொலிவிழந்து காணப்படுவதுடன் அங்கு வாழ்ந்த மக்களின் சோக வரலாறுகள் அவனைக் கண்கலங்க வைத்துவிட்டன. வன்னி மண்ணின் அவலங்களையும் யுத்தத்தில் தப்பிப்பிழைத்து உயிர்வாழ்ந்துவரும் மக்களின் மனப்பாதிப்புகளையும் தனது எழுத்துக்களில் உதயணன் உயிரோட்டமாக விளக்குகின்றார். தனது காதலனை யுத்தத்தில் பறிகொடுத்த சுபா, நான்கு வயதுப் பிள்ளையுடன் கணவனை இழந்த கௌசல்யா, பெற்றோரை இழந்து அநாதரவான நந்தா, எவருமற்ற நிலையில் மற்றவர்களின் நன்மை தீமைகளில் பங்குகொண்டு மதிப்புடன் வாழும் பிறைசூடி மாமா ஆகியோரைச் சுற்றி கதையை நகர்த்திச் செல்கிறார். இந்நாவலின் போக்கில் முற்போக்கான எண்ணக்கருக்கள் விதைக்கப்பட்டுள்ளன. விதவைகள் மறுமணம், மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு உதவுதல், வெளிநாட்டு மாப்பிள்ளைமாரை நம்பாமை, உண்மைக் காதலின் உருக்கம் நிறைந்த ஊடல், ஒருதலைக் காதலின் தவிப்பு போன்ற பல்வேறு மனதைத் தொடும் சம்பவங்கள் உயிரோட்டத்துடன் இக்கதையில் சொல்லப்படுகின்றன.