10810 கலித்தொகை: இலகு விளக்கத்துடன் இருபத்தைந்து செய்யுள்கள்.

மு.தியாகராஜா (விளக்கவுரை). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-8564-21-9.

சங்க இலக்கியங்களுள் பதினெண்மேற் கணக்கு என்ற தொகுதியுள் அடங்கும் கலித்தொகையின் இருபத்தைந்து செய்யுள்களுக்கான விளக்கவுரையை புராண வித்தகர் மு.தியாகராஜா அவர்கள் வழங்கியுள்ளார். கலித்தொகையானது திணைக்கு ஒருவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுதியாகும். இது கலித்தொகையின் சிறப்பாகும். பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாடிய பாலைத்திணை சார்ந்த 35 செய்யுள்கள், கபிலர் என்னும் புலவர் பாடிய குறிஞ்சித்திணை சார்ந்த 29 செய்யுள்கள், மருதன் இளநாகனார் என்னும் புலவர் பாடிய மருதத்திணை சார்ந்த 35 செய்யுள்கள், சோழன் நல்லுருத்திரன் என்னும் புலவர் பாடிய முல்லைத்திணை சார்ந்த 17 செய்யுள்கள், நல்லந்துவனார் என்னும் புலவர் பாடிய நெய்தல்திணை சார்ந்த 33 செய்யுள்கள், நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் என மொத்தம் 150செய்யுள்களால் கலி என்னும் யாப்பில்அமையப்பெற்றதே கலித்தொகை. இச்செய்யுள்களிலிருந்து திணைக்கு ஐந்தாகத் தேர்ந்தெடுத்து மு.தியாகராஜா அவர்கள் இந்நூலில் விளக்கவுரை தந்துள்ளார். இவர் இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தில் நிலைய அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வித்துவசிரோமணி சுப்பையாபிள்ளையைத் தமிழாசிரியராகப் பெற்றவர். ஓய்வின்போது, கொழும்பில் உள்ளஆலயங்களிலும் சமய நிறுவனங்களிலும் புராண படனம் ஓதுவதில் ஈடுபட்டவர். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 2003-2007 காலகட்டத்தில் இவர் தொடர்ச்சியாக ஆற்றிய உரைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்