கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). ஜேர்மனி: ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம், Tamilischer Schriftsteller Verein-Deutschland, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்டேர்ஸ், 356 ஏ, லக்ஸன் பிளாசா கட்டிடம், கஸ்தூரியார் வீதி).
xiv, 194 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-43074-0-7.
இலக்கிய இன்பம்- அறிந்ததும் புரிந்ததும்- சிந்தனையின் தேனூற்று என மூன்று பிரிவுகளுக்குள் 57 சிறு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தாய்க்குருவி தன் குஞ்சுக்கு தேடித்தேர்ந்து உணவூட்டுவது போல, தான் கற்றுப்பெற்ற அறிவை பிறருடன் இந்நூல்வழியாக, இலக்கிய நயத்துடன் பகிர்ந்துகொள்கிறார். பெரும்பாலானவை தமிழ் பாட உயர்தர மாணவர்களுக்கு கட்டுரையாக்கல் பயிற்சிக்கு ஏற்றவை. தமிழின் பெருமை-தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய இன்பம், திருக்குறள், புகலிடத்தில் தமிழர் கலாச்சாரம் பற்றிய பார்வை, ஆன்மீகம் சார்ந்த அறிவூட்டல், ஜேர்மனியில் தமிழர் வாழ்வியல், ஜேர்மனியில் தான் பெற்ற கல்வியியல் அனுபவங்கள், புகலிட வாழ்வினூடாக பெண்மை பற்றிய பார்வைகள் என்பன 57 கட்டுரைகளினதும் பகைப்புலமாகின்றன. பொதுவாக கட்டுரைகளில் தன்னுடைய தேடலுடன், வாசகரையும் தேடவும் சிந்திக்கவும் வைக்கிறார். கௌரி, கௌசி ஆகிய புனைபெயர்களில் தாயகத்திலும், புகலிடத்திலும் இலக்கியத்துறையில் தடம்பதித்தவர் சந்திரகௌரி சிவபாலன். மட்டக்களப்பு மாவட்டம்- ஏறாவூரில் பிறந்த இவர், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றதுடன், நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்று தன் தொழில்துறையாக ஆசிரியத் துறையை தேர்ந்தெடுத்தவர். மட்டக்களப்பு கறுவாக்கேணி தமிழ் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்ற இவர், பின்னர் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகவும், நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டு மட்டக்களப்புத் தமிழ் இலக்கியமும் பிரதேசப் பண்பும் என்பது இவரது பட்டப்படிப்பிற்கான ஆய்வாகும்.