தமிழவேள் (இயற்பெயர்: இ.க.கந்தசுவாமி). சென்னை 18: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 572, டி.டி.கே. சாலை, ஆள்வார்பேட்டை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 6: தி.கேசவன், டெக்னோ பிரின்ட்).
49 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ.
ஈழத்துப் பூதந்தேவனாரின் வரலாற்றோடு சங்ககாலப் புலவர்கள் பற்றிய குறிப்பினையும் சங்க இலக்கிய மரபுகளையும் நூலாசிரியர் இணைத்துக் கூறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் ஈழத்தவரா அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்வி நிலவும் இக்காலகட்டத்தில் தமிழவேள் அவர்களின் இந்நூலின் வரவு முக்கியமாகின்றது. இந்நூல் மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில் ஈழத்துப் பூதந்தேவனாரின் வாழ்வும் பணிகளும் ஆசிரியரால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்ப் புலவர்களும் தமிழ்ச் சங்கங்களும், சங்ககால இலக்கிய மரபுகள், இடைச்சங்க, கடைச்சங்கத் தமிழ் நூல்கள், சங்ககால எட்டுத்தொகை நூல்களும் ஈழத்துப் பூதந்தேவனாரும், ஈழத்துப் பூதந்தேவனார் பற்றித் தமிழ்ப் பேரறிஞர்கள் தெரிவித்த கருத்துகள், ஈழத்துப் பூதந்தேவனாரும் ஈழத்துத் தமிழர் வரலாறும், ஈழத்துத் தமிழர் வரலாற்றுக்கு உதவும் ஏனைய சான்றுகள் என்பன விரிவாக இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் ஈழத்துப் பூதந்தேவனாரின் குறுந்தொகைப் பாடல்களும் நற்றிணை அகநானூற்றுப் பாடல்களும் தேர்ந்து தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் மேலதிகமாக இப்பாடல்களில் காணப்படும் சிறப்புப் பற்றிய டாக்டர் உ.வே.சாமிநாதையர், பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர், பேரறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை, மகாவித்துவான் சி.கணேசையர் ஆகிய கருத்துகளும், பசும்பூட் பாண்டியன் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன. மூன்றாவது பகுதியில், இப்புலவர் பாடல்களால் அறியப்படும் அகத்துறைத் தலைவன்-தலைவி-தோழி-நாற்றாய் இயல்புகள், குறிஞ்சி மற்றும் பாலை நிலப்பகுதிகளின் நில இயல்பு, விலங்குகளின் இயல்பு, மக்களின் இயல்பு, உடைகளும் அணிகளும் ஆகியன பற்றிய விளக்கங்களும், தெய்வவழிபாடு, உவமைகள், வரலாற்றுச் செய்திகள், அருஞ்சொற்றொடர்கள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38833).