திருமதி தாமரை குணாளன் (புனைபெயர்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை: ஆதிலட்சுமி கிராப்பிக்ஸ்).
x, 118 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×14 சமீ.
லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம், இலங்கையின் வரலாற்றுத்துறையில் நூல்வழிப் பங்களிப்பை வழங்கிவருபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர், அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோருக்கு ஈழ வரலாறுசார்ந்த தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்ட மின்னஞ்சல்களினதும் கட்டுரைகளினதும் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. திருமதி தாமரை குணாளன் என்ற புனைபெயரில் எழுதியுள்ள இந்நூலில், ‘குமரிக்கண்டமா சுமேரியமா? தமிழரின் தோற்றமும் பரவலும்’ எனும் நூலின் ஆசிரியர் திரு. பா.பிரபாகரனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் முதலாவதாகவும், கொலைக்களங்களிலிருந்து அறக்களத்திற்கு (தென்பாண்டியர் வழிவந்த ஈழத்தமிழரின் தாயகமான ஏழ்பனை நாட்டுப்பிரிவு குமரிக்கண்டக் கடற்கோள்களிலிருந்து எஞ்சி ஈழம் எனும் தீவாக உருவாகியது எவ்வாறென்றும், சிங்களக் குடியேற்றங்கள் படிப்படியாக ஈழத்தினை தம்வசப்படுத்தியது எவ்வாறென்றும் எழுதப்பட்ட ஆய்வு இரண்டாவதாகவும் இடம்பெற்றுள்ளன. (இது ஒருபேப்பர்-லண்டன் பத்திரிகையில் வெளியாகியது.) தொடர்ந்து ஈழத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே தொடர்கின்றது, தோழர் தியாகு அவர்களே. எழுத்தாளர் திருமதி தாமரை தியாகு அவர்களே, மாண்புமிகு சட்டவாளர் வைக்கோ அவர்களே, மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களே, பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களே, தொல்லியல் ஆய்வாளர் இனியன் அவர்களே, மணிமேகலைப் பதிப்பகமே உனக்கொரு அன்பான வேண்டுகோள் என்பது ஈறாக ஒன்பது தலைப்புகளில் எழுதப்பட்ட கடிதங்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலக் கடிதங்கள் இயல் இரண்டில் பிரித்துத் தரப்பட்டுள்ளன. இவை முறையே பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், ஐ.நா.அதிகாரிகள், தமிழ்நாடு மாநில உறுப்பினர்கள், ஈஸ்ட்ஹாம் தமிழ் சமூகம் ஆகியோருக்கு எழுதப்பட்டவை.