இ.சு.முரளிதரன் (மூலம்), கே.எம்.செல்வதாஸ் (தெளிவுரை). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 52 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-4676-87-9. ஜீவநதி வெளியீட்டகத்தின் 113ஆவது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் தனித்துவங்களில் இரட்டுற மொழிதலும் ஒன்றாகும். சிற்றிலக்கியங்களில் சிலேடையணியை பிரத்தியேகமாகப் பலர் கையாண்டிருப்பினும் தனிப்பாக்களில் காளமேகப் புலவரே ஏகாதிக்கம் செலுத்தினார். அவரது ராஜபாட்டையில் முரளிதரனும் தன் நடைவண்டியோடு களமிறங்கியுள்ளார். தன் கவித்திறத்தால் இரட்டைக்கரு முட்டையாய் பிரசவித்துள்ள இக்கருவிதைகள் முன்னதாக ஜீவநதி சஞ்சிகையின் ஐந்து இதழ்களில் பதிற்றுப் பத்தாகத் தொடர்ந்து வெளிவந்திருந்தன. மாதிரிக்கு “கண்ணபிரானும் எம்ஜிஆரும்” என்ற தலைப்பிலான ஒரு கவிதையும், அதற்கான விளக்கமும்:
“ஆண்டவர் என்பதால் ஆலயத்தால் வள்ளன்மை
பூண்டதால் ராதாகை துப்பாக்கி தீண்டியதால்
பெண்விருப்பால் நம்பியார்க்கும் புத்திசொல் வேடத்தால்
கண்ணனுக்கு எம்.ஜி.ஆர். நேர்”
தெளிவுரை: கண்ணபிரான் கடவுள் என்னும் பாங்குடையவர். கோயில்கள் பலவற்றை உடையவர். அருளை அள்ளி வழங்குவார். ராதா தனது கையினால் உணவை சமைத்துக் கொடுத்து மெய்யினைத் தழுவிக்கொண்ட சிறப்பினை உடையவர். பெண்கள் பலராலும் விரும்பப்படுபவர். நம்பிய அனைவருக்கும் அறிவுரை சொல்லிக் காப்பாற்றும் பாத்திரமாக அவதாரம் செய்தவர். அவ்வாறே எம்.ஜி.ஆர். தமிழகத்தை ஆண்ட தலைவராவார். எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. அள்ளித் தந்த வள்ளல் என்று போற்றப்படுகின்றார். எம். ஆர்.ராதாவின் கையிலிருந்த துப்பாக்கியின் தோட்டா கழுத்தைத் துளைத்துச் சென்றது. பெண்களால் அதிகம் விரும்பப்பட்டார். திரையிலே “நம்பியாருக்கு” அறிவுரை சொல்கின்ற வேடத்தினை ஏற்றுக்கொண்டவர். ஆதலால் கண்ணபிரானுக்கு எம்.ஜி.ஆர். நிகராவார்.