8567 அரசிகள் அழுவதில்லை.

முல்லைமணி (இயற்பெயர்: வே.சுப்பிரமணியம்). மட்டக்களப்பு: மலர் இலக்கியக் குழு, 21 மத்திய வீதி,  1வது பதிப்பு, ஜுலை 1977. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50 கண்டி வீதி).

xiv, 86 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 18×12.5 சமீ.

1970-71ம் ஆண்டுப்பகுதியில் மலர் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை வெளியிட்ட அன்புமணி இரா. நாகலிங்கம் அவர்களைத் தலைவராகக் கொண்ட இலக்கியக் குழுவினர், பின்னர் மலர் இலக்கியக்குழு என்ற பெயரில் ஒளி  நமக்கு வேண்டும் (செ.யோகநாதன்), அவர்களுக்கு வயது வந்தவிட்டது (க.அருள் சுப்பிரமணியம்) ஆகிய இரு நூல்களை வெளியிட்டனர். தொடர்ந்து மூன்றாவதாக முல்லைமணியின் இந்நூலை வெளியிட்டுள்ளனர். இத்தொகுப்பில் முல்லைமணியின் 12 சிறுகதைகள் உள்ளன. அரசிகள் அழுவதில்லை, மீனவர் குடும்பப் பெண்ணொருத்தியின் தாய்ப் பாசத்தை ஒரு பணக்காரப் பெண்ணின் மலட்டுத் தன்மையுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் கதை. பிணைப்பு- ஒரு உழைப்பாளி தன் விவசாய நிலத்தின்மீது கொண்ட பாசத்தின் ஆழத்தைச் சித்திரிப்பது. துணை- வாழ்வைத் தவறவிட்ட ஒரு படித்த மனிதரின்  காலம் கடந்த கழிவிரக்கம்.  வீட்டில் நடந்தது- ஒரு யாழ்ப்பாணக் கல்யாணத் தரகரின் பூர்ஷ்வாக் கொள்கை சரிவதைச் சித்திரிப்பது. ஐராங்கனி-சிங்களக் கன்னியொருத்தியின் இனவேற்றுமை கடந்த மனிதாபிமானத்தைச் சித்திரிப்பது இவ்வாறாக உறவுகள், கிராமங்கள் கற்பழிக்கப்படுகின்றன, அவளும் தோற்றுவிட்டாள், என்ன அநியாயம் சேர், காத்திருக்கவேண்டும், நூலேணிகள் அமர காவியம் என இத்தொகுப்பின் பன்னிரு கதைகளும்  உள்ளத்தில் ஏதோவொரு வகையில் சலனத்தை ஏற்படுத்துவதாயுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  87306).

ஏனைய பதிவுகள்