8618 தேவதைகளின் தீட்டுத்துணி.

யோ.கர்ணன். சென்னை 600024: வடலி வெளியீடு, 54/13, 10வது தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

120 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-81-908405-7-6.

யுத்தத்தில் ஒரு காலைப் பறிகொடுத்தவர் யோ.கர்ணன். யுத்தம் அவருடையகல்வியை, தொழில்வாய்ப்புக்களை, அவருக்கான எதிர்காலத்தை என எல்லாவற்றையும் தின்று தீர்த்துள்ளது. அவருடைய கடந்த காலத்தின் நினைவுப்பரப்பு விசைகூடிய ஒரு காந்தத்தைப் போல அவரைக் கவர்ந்திழுத்துக் கொண்டேயிருக்கிறது. விடுதலைக்கான போராட்டம் என்று ஆரம்பித்த அரசியல் செயற்பாடுகள், முடிவற்ற யுத்தமாகிக் கர்ணனைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையையே பாதித்துவிட்டன. இந்நூலிலுள்ள கதைகள் அதையே சொல்கின்றன. ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் அனுபவம் தொடர்பில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுதி இதுவாகும்.  இது பெரும் புனிதங்களைத் தகர்க்கவும், ஜீரணிக்க முடியாத வலியை நம்மீது இறக்கவும் வல்ல உண்மைகளைச் சுமந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற மக்களில் ஒருவரான யோ.கர்ணனின் இந்தச் சாட்சியங்கள் அவரை நல்லதொரு கதைசொல்லியாகவும் ஆக்கியுள்ளது. ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும், மன்னிக்கப்படாதவனின் கைத்தொலைபேசி, பெயர், தஸ்யுக்களின் பாடல்கள், சுதந்திரம், பாதுகாப்பு வலயம், திருவிளையாடல், றூட், சடகோபனின் விசாரணைக் குறிப்பு, தேவதைகளின் தீட்டுத்துணி ஆகிய பத்துக் கதைகளிலும் இதனை வாசகர் உள்வாங்கமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்