எஸ்.ஏ.உதயன். மன்னார்: கலையருவி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (மன்னார்: சைபர்சிட்டி ஆர்ட் வேர்க்ஸ், பேராலயச் சந்தி, பெற்றா).
116 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-52958-1-9.
இளம் சம்மாட்டி மரியாசு இந்நாவலின் நாயகன். அவனுக்குத் துணை சீமாம்புள்ளை. கடற்தொழில்சார்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிலாளர்களின் சுமையைக் குறைக்க முனையும் மரியாசு – அவர்களுக்கு லாபத்தில் பங்கும் வழங்குகின்றான். சீமாம்புள்ளையின் மூன்று புதல்விகளில் கடைக்குட்டி ரெத்தினமாலையுடன் மரியாசு காதல் கொள்கிறான். சந்தர்ப்பவசத்தால் அவளது தமக்கை சுகந்தமாலையுடன் பாலியல்தொடர்பு கொண்டதால் அவள் கருவுறுகிறாள். அதனால் மரியாசு ரெத்தினமாலையின் காதலை இழக்கிறான். இடையில் சுகந்தமாலை சமூகத்தின் பழிச்சொல்லுக்கு இலக்காகித் தற்கொலை செய்துகொள்கிறாள். இந்நாவல் 60 வருடங்களுக்கு முன்னிருந்த மன்னார் மீனவ மக்களது வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டுகின்றது. மன்னார் கடற்கரைப் பிரதேசக் கிராமங்கள், அக்கிராமங்களின் சூழல், பருவ மாறுதல்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை இந்நாவலில் உயிர்த்துடிப்புடன் தரிசிக்கமுடிகின்றது. இறால் பிடிப்பதற்காக நீர்கொழும்பிலிருந்து வரும் சிங்கள மீனவர்களுக்கும் மன்னார் மீனவர்களுக்கும் இடையில் ஏற்படும் பிணக்குகள், முரண்பாடுகள் என்பனவும், அப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க முனையும் காவல்துறையின் பக்கச் சார்பான போக்கும், இவற்றுக்கும் அப்பால் கடற்தொழிலாளர்களின் மனிதநேய உறவுகள் என்பன இந்நாவலில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்படுகின்றன. மன்னார் மண்ணின் மணம்கமழ நாவலை நகர்த்திச்செல்லும் ஆசிரியர் தேவைக்கேற்ப பிரதேச வழக்கில் பயன்படுத்தப்படும் பழமொழிகள், உவமைத்தொடர்கள் என்பவற்றையும் ஆங்காங்கே பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கின்றார். லெனின் மதிவானம் எழுதியுள்ள அணிந்துரை நூலுக்கு மெருகூட்டுகின்றது. மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.உதயன் ஏற்கெனவே லோமியா, தெம்மாடுகள், வாசாப்பு ஆகிய நாவல்களையும் குண்டுசேர் என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியவர். இது இவரது நான்காவது நாவலாகும்.