14280 வாழத் துடிக்கும் வன்னி: சமூகவியல் கட்டுரைகள்.

பொன்னையா மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா வெளியீட்டகம், 7/3, 10ஆம் ஒழுங்கை, வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோவில் வீதி).xvi, 167 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISDN: 978-955- 71254-1-1. 40 ஆண்டுகள் கடந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நின்று மக்களின் பிரச்சினைகளை நடுநிலையாக வெளிப்படுத்தி வரும் ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் ‘வாழத் துடிக்கும் வன்னி ” என்ற இந்நூலில், வன்னி மக்கள் போரினால் அனுபவித்த துன்பங்களையும் அதிலிருந்து மீட்சிபெறத் துடிக்கும் இதயங்களையும் அவர்களின் ஏக்கத்தையும் போரின் பின்னரான வன்னியின் வளத்தையும், வனப்பையும் தனது கட்டுரையாக்கத்தின் வழியாக மீள்தரிசனம் செய்ய வைத்திருக்கிறார். கடந்து வந்த மறக்கமுடியாததொரு வாழ்வின் வலிமிகுந்த சம்பவங்களின் ஒரு ஆவணத்தொகுப்பு முயற்சி இதுவாகும். நெருக்கடிகளும் உயிர் அச்சுறுத்தல்களும் மிகுந்த யுத்த காலத்தில் கடினமான சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்காக அவர் அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் என்பதை அனைவரும் அறிவர். 2009ஆம் ஆண்டுக்குப்பின் வன்னியில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பற்றியும் அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பற்றியும் இந்நூல் அதிகளவில் பேசுகின்றது. வன்னியின் யுத்தபூமி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டிருந்த ஒரு சூழ்நிலையில், 2010ஆம் ஆண்டு அப்பிரதேசத்துக்குச் செல்ல இராணுவத்தால் அனுமதியளிக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் பத்தரிகையாளராக திரு. மாணிக்கவாசகரும் உள்ளே சென்று, தான் உள்வாங்கிக் கொண்ட நிலைமைகளையும் அங்கு திறந்தவெளிச் சிறை களுக்குள் வாழவிடப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் உய்த்து உணர்ந்து, அவற்றை அறிவுபூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் பல கட்டுரைகளை வீரகேசரியில் எழுதத்தொடங்கினார். 31.5.2010 முதல் 24.6.2010 வரை அவர் எழுதிய காத்திரமான புதிய செய்திகள் வெளி உலகின் பார்வையில் அதிர்ச்சி அலைகளை அந்நாளில் ஏற்படுத்தியிருந்தன. அத்தகைய கட்டுரைகளின் தொகுப்பாகவே இந்நூல் வெளிவந்துள்ளது. இந் நூலில் இவர் எழுதிய மரத்துல பாம்பு பிள்ளைகள் சொல்லத்தான் தெரிஞ்சது, சராசரியாக எட்டு மாணவர்கள் உயிரிழந்து போனார்கள், உழைப்புத் திறனை உணர்த்தியது, ஓடி ஓடிப் படம் எடுத்தனர், சனமெல்லாம் நடையிலதான் திரியுது, வாழ்கையின் உயிர்ப்பும் துடிப்பும், சமூகங்கள் ஒரே குடும்பமாக வாழும் சிறப்பு, இடிந்த வீட்டில் ஆண்டுத் திவசம், ஜோசப் ரிச்சர்ட்சன் பிராங்கோ, உக்கிர சண்டையில் உடைந்த தண்ணீர்த் தாங்கி, தேடாத இடமில்லை சொல்லாத ஆளில்லை, பிடித்துப்போன ‘மிதிவெடி”, நெல்லும் மில்லும் கூடவே வந்தன, முள்ளாகத் தைக்கும் முறிகண்டி, அச்சம் அவமானம் வெளியில் சொல்லமுடியாத நிலை, தரைமட்டமாகியும் தன்னம்பிக்கை இழக்காத தர்மபுரம், பொன்னம்மாவின் பிள்ளைகள் போனதெங்கே?, அடுத்த கட்ட அரசியல் செயற்பாடு என்ன? ஆகிய 18 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்