ஏ.சீ.எம். இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISDN: 978-955-0932-09-2. இளைப்பாறிய இராஜதந்திரியும் சட்டத்தரணியுமான ஏ.சீ.எம்.இப்றாஹீம் எழுதியுள்ள கட்டுரைத் தொகுப்பு நூல். சிறியதும் நீண்டதுமான 16 கட்டுரைகளில் பொதுவாக சீனாவைப் பற்றியும், விஷேடமாக மக்கள் சீனக் குடியரசின் அரசியல், பொருளாதார, சமூக அமைப்பைப் பற்றியும் சிறந்ததொரு அறிமுகமொன்றைத் தருவதாக அமைந்துள்ளது. சீனாவில் அவர் வாழ்ந்த மூன்றரை வருட சேவைக் காலத்தில் அனுபவித்தவை, கணடறிந்து, வாசித்தறிந்தவை அனைத்தும் இந்நூ லின் உருவாக்கத்திற்குத் துணைநின்றுள்ளன. சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான அரசியல், இராஜதந்திர பொருளாதார மற்றும் முதலீடு சம்பந்தமான நட்புறவுநடவடிக்கைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறியுள்ளார். இது ஆசிரியரின் முதலாவது நூலாகும். இந்நூல் சீனா பற்றிய ஓர் அறிமுகம், சீனாவில் நான் கழித்த சில காலம், பலம் பொருந்திய சீனா, சீனாவின் சிறப்பு, மாணவர் கிளர்ச்சியும் தியம்மன் சதுக்கமும், சீனாவின் அரசியல், சீனாவின் சமூக அமைப்பு, சீனாவுக்கான அமைதிவழி அபிவிருத்தியும் அதன் இரகசியமும், நவீன காலத்திற்கான மாற்றங்களின் ஆரம்பம், வளர்ச்சிப் பாதையில் சீனா, இலங்கைசீனா உறவின் வரலாற்றுப் பின்னணி, பரஸ்பரம் புரிந்துணர்வும் நல்லிணக்கமுமே சீனா-இலங்கை நட்புறவுக்கு வித்திட்டது, சீனா-இலங்கை அரசியல் பிரமுகர்களின் பயணங்கள், சீனாவும் இலங்கையும் இன்று, சீனாவில் நான் கற்றறிந்த பாடங்கள், நான் சந்தித்த சில பிரபலங்கள் ஆகிய பதினாறு அத்தியாயங்களின் வழியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர சேவையில் இணைந்து, சீனக்குடியரசின் தலைநகரிலும், தாய்லாந்து, சவூதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சேவையாற்றியவர்.