இயூஜீன் இயோனெஸ்கோ (பிரெஞ்சு மூலம்), பி.விக்னேஸ்வரன் (தமிழாக்கம்). சென்னை 600024: வடலி வெளியீடு, D2/5, டி.என்.ஹெச்.பி., தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 88 பக்கம், விலை: இந்திய ரூபா 55.00, அளவு: 21.5×14 சமீ. 1952இல் வெளிவந்த, ருமேனிய நாடகாசிரியர் யூஜினது “நாற்காலிகள்” நாடகத்தின் தமிழாக்கம் இது. Les Chaises என்ற பெயரில் இது பிரெஞ்சு மொழியில் பிரசுரமாகியிருந்தது. இயூஜீன் இயோனெஸ்கோ (1912-1994) ரோமானியாவில் பிறந்திருந்தாலும் தனது நாடகங்களை பிரெஞ்சு மொழியிலேயே எழுதிவந்தார். நாடகத்தில் இரண்டு பாத்திரங்கள்: அதிமுதுமையிலும் தனிமையிலும் பைத்தியத்திலும் வாடும் கணவன்-மனைவி. வாழ்வில் தாம் எட்டமுடியாதவற்றையும் சாதிக்க முடியாதவற்றையும் நினைத்து ஆதங்கப்பட்டுத் தொடர்ந்து சோர்வும் விரக்தியும் பெறுகின்றவர்கள் அவர்கள். இறப்பதற்கு முன்பாக முக்கியமான நண்பர்கள், பிரமுகர்களை அழைத்துத் தங்களுடைய சாதனைகளையும் சிறப்பையும் சொல்லிவிடுவது என்று தீர்மானித்து எல்லோரையும் அழைக்கிறார்கள். தங்களைப் பற்றிய ஒரு பேச்சை நிகழ்த்துவதற்கு காது கேளாத, வாய் பேசமுடியாத ஒருவரையும் பேச்சாளராக அழைத்திருந்தார்கள். பேச்சாளரைத் தவிர எல்லா விருந்தினர்களும் வீட்டில் வந்து அமர்வதான கற்பனையிலேயே நாடகம் நகர்கின்றது. ஒவ்வொரு வருக்குமான நாற்காலிகளை மேடையில் கொண்டு வந்து வைப்பதே ஒரு முக்கிய செயலாக மனைவிக்கு அமைகின்றது. மேடை முழுவதும் நாற்காலிகளால் நிறைகின்றது. பேச்சாளர் வருவார். கணவனும் மனைவியும் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துவிடுகிறார்கள். இலங்கை வானொலியிலும் இலங்கைத் தொலைக்காட்சியிலும் (ரூபவாஹினி) நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்னேஸ்வரன் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். அவர் ஒத்தெல்லோ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை வானொலிக்காகவும் மேலும் நாடகங்களை தொலைக்காட்சிக்காகவும் தயாரித்து நெறியாள்கை செய்தவர். மிகுந்த கவனத்துடனும் நுட்பத்துடனும் நாற்காலிகள் நாடகத்தை தமிழுக்குத் கொண்டு வந்துள்ளார் விக்னேஸ்வரன்.