A.C.M. இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 144 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0932-27-6. சட்டத்தரணி கலாபூஷணம் A.C.M. இப்றாஹீம் அவர்கள் எழுதிய 19 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. மத்திய கிழக்கின் வேலைக்காரி, பொன்நகையை வென்ற புன்னகை, முடிவில்லாத சோதனைகள், மனச்சாட்சி, தீர்ப்பு, அடைய முடியாத இலக்கு, திசை மாறிய மாடப்புறா, எட்டாக்கனி, உணர்வுகள் உறங்குவ தில்லை, உடைந்துபோன ஏணி, வைராக்கியம், நன்றியுள்ள நல்ல மனிதர்கள், கலைந்து சென்ற கனவு, பொறுப்புணர்ச்சி, பிரயத்தனம், மக்காப் பயணம், பொத்தானை வயல், துறவு, தூரத்துச் சொந்தம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. ஆசிரியரின் நிஜ வாழ்க்கையில் தன்னைக் குறுக்கறுத்துச் சென்ற சம்பவங்களும் நிகழ்வுகளுமே கற்பனை கலந்து இக்கதைகளில் சொல்லப் பட்டுள்ளன. அரச சேவைகளில் தான் அனுபவித்த கசப்பான சம்பவங்களும், சமூக அமைப்பில் காணப்பட்ட கலாச்சாரப் பிறழ்வுகளின் பிரதிபலிப்புகளும், இன்றைய நவீனகாலச் சமூக அமைப்புகளில் காணப்பட்ட குளறுபடிகளும் குத்துவெட்டுக்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் நிலவும் ஊழல்களும் உணர்வுகளின் அத்துமீறல்களும் இதிலுள்ள கதைகளின் பேசுபொருளாகியுள்ளன. ஏ.சீ.எம். இப்றாஹீம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர சேவையில் இணைந்து, சீனக்குடியரசின் தலைநகரிலும், தாய்லாந்து, சவூதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சேவையாற்றியவர். இது இவரது நான்காவது நூலாகும்.