சர்மிலா வினோதினி. வவுனியா: பூவரசி வெளியீடு, 371, மதவடி ஒழுங்கை, மன்னார் வீதி, வேப்பங்குளம், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (வவுனியா: பூவரசி வெளியீடு, மன்னார் வீதி, வேப்பங்குளம்). 108 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5018-00-0. சர்மிலா திருநாவுக்கரசு என்ற இயற்பெயர் கொண்ட சர்மிலா வினோதினி கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் உள்ள வேரவில்லை பிறப் பிடமாகக் கொண்டவர். மன்னாரை வசிப்பிடமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புப் பட்டதாரியாவார். சமூக உளவியலும் ஆற்றுப்படுத்தலும், ஊடகத் தொடர்பாடலும் அறிவிப்புத்துறை சார் நுட்பங்களும் ஆகிய துறைகளில் பட்டய நெறிகளையும் நிறைவு செய்துள்ளார். கவிதை, சிறுகதை, நாடகம், மேடைப்பேச்சு போன்ற துறைகளில் தேசிய ரீதியில் வெற்றிகளையும் ஈட்டியுள்ளார். “இராப்பாடிகளின் நாட்குறிப்பு” என்ற கவிதைத் தொகுப்பினை 2016இல் வெளியிட்டவர். இச்சிறுகதைத் தொகுதியில் இவர் எழுதிய வலசை, நெருடல், செந்தாமரை, நீங்க போங்க ராசா, நீர்க்குமிழி, போயிற்று வாறன், புதுச் சப்பாத்து, உப்புக்காற்றில் உலரும் கண்ணீர், பூக்களைத் தொலைத்த பூந்தொட்டி, ஆகிய பத்துக் கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் போரியல் வாழ்வின் அச்சங்களையும், கண்ணீரையும், இழப்புகளையும் இயலாமைகளையுமே சொல்கின்றன. காதலாக இருந்தாலும், இல்வாழ்வாக இருந்தாலும் போரும் காதலும், போரும் இல்வாழ்வும் என்றே உணர முடிகின்றது.