இணுவில் ஆர்.எம். கிருபாகரன். சென்னை 600037: இராமநாதன் பதிப்பகம், நெ.25, 3வது தெரு, ஆபீசர்ஸ் காலனி எக்ஸ்டென்ஷன், முகப்பேர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xvi, 160 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 18×12 சமீ. 15 அத்தியாயங்களில் விரியும் சமூக நாவல் இது. இலங்கையில் மலையகத்தை ஒரு தளமாகவும், கிழக்கின் தம்பலகாமத்தை மற்றொரு தளமாகவும் கொண்டு மலையகத் தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களின் சோக வரலாற்றினை நாவலாகப் புனைந்துள்ளார். பிரித்தானியரால் தென்னிந்தியாவிலிருந்து கூலிகளாக அழைத்துவரப்பட்டவர்கள் ஒன்றரை நூற்றாண்டுக் காலமாக முன்னேற்றம் எதையும் அடையவிடாமல் கண்ணுக்குத் தெரியாத விலங்கிட்டு, அவர்கள் அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படும் அவலத்தை இந்நாவல் சித்திரிக்கின்றது. இலங்கை பெயருக்குச் சுதந்திரமடைந்தாலும் இவர்களின் வாழ்வில் கவ்விய இருள் இன்னும் அகலவேயில்லை என்பதை இந்நாவல் வெளிச்சமிடுவதுடன், இவர்களின் வாழ்வை வளம்பெற வைப்பதற்கு என்ன செய்யலாம் என்று சில கருத்துக்களையும் ஆசிரியர் நாவல் வழியாகப் பதிவு செய்திருக்கிறார். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இணுவில் ஆர்.எம். கிருபாகரன் முன்னதாக நீறுக்குள் நெருப்பு என்ற சிறுகதைத் தொகுதியையும், இவர்கள் எப்போதும் விழுதுகள், வசந்தம் வரவேண்டும் ஆகிய இரு சமூக நாவல்களையும், கல்யாணிபுரத்துக் காதலன் என்ற சரித்திர நாவலையும் எழுதியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் C 000221).