சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுன் 2020. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). x, 265 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7363-03-5. சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய முதலாவது நாவல் இது. சமூகத்தில் ஒருவன் எப்படியான துன்பங்களையும் விமர்சனங்களையும் சவால்களையும் சந்திக்கவேண்டி வருகின்றதென்பதை இந்நாவலில் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். இக்கதையில் நாயகன் எத்தகையவர்களால் துன்புறுத்தல்களுக்கும் மனக்கிலேசத்திற்கும் உள்ளாகிறான் என்று விபரிக்கும் ஆசிரியர் துன்புறுத்தல்களை நிகழ்த்தும் அல்லது மனக்கிலேசத்தை ஏற்படுத்தும் நபர்களின் நடத்தைப் பிறழ்வுகள் பற்றி எதுவும் சொல்லமுற்படவில்லை. அதனை நியாயப்படுத்தும் ஆசிரியர் ‘ஒரு சமூக இயங்கியல் தளத்தில், அச்சமூகத்திலுள்ள எவரும் தனிமனித வசைபாடலைத் தவிர்க்கின்றபோது தான் அந்தச் சமூகம் மனதளவில் மிக வளர்ச்சிபெற்ற சமூகமாகப் பார்க்கப்படும்” என்கிறார். இந்நாவலில் ஒரு நிலம், அந்த நிலத்து மக்கள், அவர்களின் அரசியல், போர், போராளிகள், தலைவர் என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால் அதனையும் கதையின் பின்புலத்தில் சேர்த்திருக்கிறார்.