தேவகாந்தன். சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 644 பக்கம், விலை: இந்திய ரூபா 550., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9919755- 9-4. இறுதி யுத்தத்தின்போது மக்கள் அடைந்த அவலங்களைவிட, அதன் பின்னால் அவர்களின் வாழ்வு மீட்சியற்ற விதமாய் சிதைந்து போயிருப்பதையும், மனிதத்தை, கலாசாரத்தை, சகலதையும்தான் சிதைத்துக்கொண்டிருக்கும் போரின் உப விளைவுகளையும் இந்நாவல் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் இன்னும் ஒரு அரை நூற்றாண்டுக்கு யுத்தத்தின் அழிவின் தழும்புகளும் நோவுகளும் இருக்கவேதான் போகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோரை எண்ணி ஏங்கித் தவித்த இதயங்களும், காணாமலானோர் காரணமாய் இன்னும் யுத்தவடுக்கள் நீங்காது வாழ்பவர்களின் துடிப்புகளும் இருக்கத்தான் போகின்றன. இரவின் கொதி மூச்சுக்கள் சமுத்திரப் பேரோசையாய் இந்த மண்ணை நடுங்கவைக்கப் போகின்றன. இந்தத் தலைமுறையின் சாபமாக இது இருக்கின்றது. இதன் நியாயமென்ன என்ற கேள்வியிலிருந்தே “கலிங்கு” நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. யுத்தம் பற்றிய நினைவுகள் விழுப்புண்களென ஈழத்தமிழ்ச் சமூகத்தைத் தொந்தரவு செய்தபடியிருக்கிறது. சொற்கள் கொண்டளக்க முடியாத நோவு கொண்டழும் சமூகத்தின் உளவியலை, அவர்களது மீண்டெழும் முயற்சிகளை, குற்றவுணர்வின் கண்ணீரை, தோற்றும் துவளாத மனிதர்களை பிழைத்து இருத்தலின் சாகசத்தை 2003-2015 காலப்பகுதியைக் களனாகக் கொண்டிருக்கும் கலிங்கு பேசுகின்றது. அதே வேளை இலங்கைத் தீவினைச் சூழ்ந்து இறுக்கும் இனத்துவேசத்தின் மூலவேர் எதுவெனவும் அது விசாரணை செய்கிறது. இரணைமடுக் குளத்தின் மிகைநீர் வெளியேற்றம், பாசனநீர் வெளியேற்றமாகிய இரண்டின் செயற்பாடுகளையும் துல்லியமாய் பிரித்துநின்ற சொல் “கலிங்கு”. அது திறக்கப் பாய்தலின் உத்தியாயும் அங்கே அமைந்திருந்தது. அதனைச் சூழ்ந்த பிரதேசங்களுக்கும் அந்த அணைக்கட்டுக்குமே அது ஒரு பாதுகாப்பின் அம்சமாகும். கலிங்கு பூட்டப்பட வேண்டிய நேரத்தில் பூட்டி, திறக்கப்படவேண்டிய நேரத்தில் திறக்கப்படாவிடில் அநர்த்தங்கள் நிகழும். 1973இல் கிளிநொச்சியின் வெள்ள அநர்த்தம் கலிங்கு திறக்கப்படாததன் விளைவு. அதையே புத்தாயிரத்தின் முதல் தசாப்த இறுதியில் விளைந்த ஓர் அரசியல் அவலத்தினை நுட்பமாய் விபரிக்க கலிங்கின் பொறிமுறையை ஒரு பூடகமாக தேவகாந்தன் தன் நாவலில் பொதிந்து வழங்கியிருக்கிறார். 1947இல் பிறந்த தேவகாந்தன் யாழ்ப்பாணத்தில் தன் கல்வியை முடித்து, 1968இல் ‘ஈழநாடு” நாளிதளின் ஆசிரியபீடத்தில் இணைந்து பணியாற்றியவர். 1984இல் தமிழகம் சென்று நீண்டகாலம் அகதியாகத் தங்கியிருந்தவர். அக்காலகட்டத்தில் கலை, இலக்கிய, சினிமா முயற்சிகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டவர். கனவுச்சிறை உள்ளிட்ட எட்டு நாவல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் எமக்கு வழங்கியவர். தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.