14776 நான் நீயானால் (குறுநாவல்).

இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு 5 (கிழக்கு மாகாணம்): கணேஸ்வரி குடிசார் நிர்மாணங்களும் ஆலோசனைகளும், 36யு, மத்திய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: ரோயல் பிரின்டர்ஸ்). viii, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. இந்நாவல் கிராமியச் சமூகத்தில் நடக்கும் மண்வெட்டிக்கு புடி போடுதல் என்ற நிகழ்வோடு ஆரம்பித்து பல்வேறு குடும்பச் சூழல்களில் நடைபெறும் விடயங்களை எமது கண்முன் படம் பிடித்துக்காட்டி மனிதனின் உயர் பண்புகள் இன்னும் எம் மண்ணில் நிலைத்திருப்பதை உணர்த்துவதோடு சமூகத்திலுள்ள ஒவ்வொரு மகனும் சிந்திக்கவேண்டிய பல நல்ல பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கதையில் ஆங்காங்கே முதுமொழிகளும், மேற்கோள்களும் பொருத்தமான வகையில் கையாளப்பட்டுள்ளன. “பாண்டியூர் இராகி” என்ற பெயரிலும் ஆக்க இலக்கிய உலகில் தடம் பதித்தவர் கலாபூஷணம் இரா. கிருஷ்ணபிள்ளை. ஆன்மீக இலக்கிய ஈடுபாடுடைய இவர் மிகச்சிறந்த பேச்சாளருமாவார். சிறுகதை மாத்திரமன்றி, 1954 முதல் இன்று வரை இருபதுக்கும் அதிகமான நாடகங்களையும் எழுதியிருக்கிறார். ஒரு சிறுகதையாளராக, கவிஞராக, நாடகக் கலைஞராக பல்துறைகளிலும் மிளிர்ந்துவரும் இவரது முதலாவது நாவல் இதுவாகும். கலைப்பட்டதாரியான “பாண்டியூர் இராகி” ஏறத்தாழ ஐம்பதாண்டுகால இலக்கியப் பரிச்சயம் உள்ளவர். ஆசிரியராகப் பணியாற்றி, அதிபராக ஓய்வுபெற்ற இவர் ஒரு பன்னூலாசிரியருமாவார். அரங்கியல் பின்புலத்தில் வளர்ந்த இவரது முதலாவது நாடகம் “மன்னிப்பு” என்ற பெயரில் கல்முனை பாத்திமா கல்லூரியில் மேடையேறியது. அப்போது இவர் எட்டாம் ஆண்டில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57341).

ஏனைய பதிவுகள்