14780 பஞ்சம் பிழைக்க வந்த சீமை: வரலாற்று நெடுங்கதை.

மு.சிவலிங்கம். கொட்டகலை: குறிஞ்சித்தமிழ் இலக்கிய மன்றம், தமயந்தி பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுலை 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xviii, 323 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955- 52818-1-2. பஞ்சம் பிழைக்கவந்த சீமையின் கதாநாகன் வேலாயுதம் என்ற இளைஞன், திருச்சி மாவட்டம், வாலி கண்டபுரத்தில், முருக்கன்குடி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவன். தனது நண்பர்களான அர்ச்சுனன், தாண்டவன், பழனி, சீரங்கன் ஆகியோருடன் 1867ம் ஆண்டில் இலங்கைக்கு ஆள்கட்டி கங்காணி மூலம் கண்டிச் சீமையை நோக்கிப் புறப்படுகிறான். முருக்கன்குடி கிராமத்திலிருந்து, திருச்சி வரை காட்டு வழியாக நடந்து வருகிறார்கள். திருச்சியிலிருந்து நடந்து பாம்பனில் தங்கி ராமேஸ்வரம் கடந்து, தனுஷ்கோடியிலிருந்து படகு வழியாக தலைமன்னார் வருகின்றனர். அந்தப் படகுப் பயணத்தில் அர்ச்சுனன், தாண்டவன் ஆகிய இருவரையும் படகு விபத்தில் வேலாயுதம் பறிகொடுக்கிறான். எஞ்சியவர்களுடன் மன்னார் காட்டிலிருந்து மாத்தளை முகாம் வரை 150 மைல் தூரத்தை நடைப் பயணத்தோடு முடிக்கின்றனர். மாத்தளையிலிருந்து கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மேமலை தோட்டத்தில் சில வருடங்கள் கோப்பித் தோட்ட வேலையில் நண்பர்கள் மூவரும் ஈடுபடுகின்றனர். கோப்பிநோய்க் காலத்திற்கும் கொலரா நோய்க் காலத்திற்கும் முகம் கொடுத்து தப்பிப்பிழைத்து ஒத்தக்கடை என்னும் கினிகத்தேனை பிரதேசத்து அல்லித் தோட்டத்திற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கே சிலகாலம் இருந்து தோட்ட நிர்வாகத்தினால் சீரங்கனும் வேலாயுதமும் வேறு தோட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பழநி தனியாக அல்லித் தோட்டத்திலேயே தொழில்செய்ய நிறுத்தப்படுகின்றான். பின்னர் அல்லித்தோட்டத்திலிருந்து வேலாயுதம் அட்டன் தொப்பி தோட்டத்திற்கும், சீரங்கன் அப்புத்தளை தங்கமலை தோட்டத்திற்கும் அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் எட்டு ஆண்டுகளோடு சீரங்கனும் பழனியும் கிராமத்துக்குத் திரும்புகிறார்கள். வேலாயுதம் மேலும் இரு ஆண்டுகள் தொழில் செய்து 1877ம் ஆண்டளவில் தன் கிராமத்திற்குத் திரும்புகின்றான். இந்த இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் கண்டி மேமலை தோட்டத்து நண்பர்களோடும் அல்லித்தோட்டம் தொப்பித் தோட்டம் ஆகிய இடங்களில் காத்தான், கணவதி, அரப்புலி, மகாலிங்கம், பூபதி, வீரமன் பெரியப்பா என்ற நட்புகளோடும் கண்டிச் சீமையில் வாழ்ந்த காலத்தை வேலாயுதம் முடித்துக் கொள்கின்றான். அவனது நண்பர்களினதும் அடுத்த பரம்பரையினரான பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வரை தோட்டத்தோடும் தொழிலோடும் சமூகத்தோடும் அரசியலோடும் தேசத்தோடும் 1977ம் ஆண்டோடு 110 ஆண்டுகளுக்கான வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களது அடுத்த பரம்பரை எப்படி வாழப் போகின்றது என்ற தகவலோடும் கதை முற்றுப்பெறுகின்றது. வேலாயுதம் தனது பத்தாண்டு (1867-1877) கால வாழ்க்கையை முடித்துவிட்டு தாயகம் திரும்புவதோடு கதை முடியாமல், வேலாயுதம் ஊர் திரும்பிய பின்னர் அவன் வாழ்ந்த தோட்டத்திலேற்பட்ட வரவேற்கத்தக்க மாற்றங்களும், வேண்டத்தகாத மாற்றங்களும் சுருக்கமாக நாவலாசிரியரால் விபரிக்கப்படுகின்றன. நம்பிக்கைக் கீற்றோடு நாவல் நிறைவுறுகின்றது. ஆரம்பத்தில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு மாத்திரம் வழங்கிவரப்பட்ட “கரிகாற்சோழன் விருது” கடந்த 2015ஆம் ஆண்டு முதல் புரவலர் சிங்கப்பூர் முஸ்தபாவினால் இலங்கைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் தனது “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” நாவலுக்காக இவ்விருதைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்