14761 கானல் தேசம்.

நொயல் நடேசன் (இயற்பெயர்: என்.எஸ்.நடேசன்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை: 600077: மணி ஓப்செட்). 399 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-86820-88-4. கானல் தேசம் நாவல், இலங்கையில் நீடித்த ஈழவிடுதலைப்போராட்டம் குறித்து விமர்சனப்பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. போருக்காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங்களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்று உண்மைகளை மானுட அறத்தின் ஒளிமூலம் பேச விழையும் பிரதி இது. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களது தவறுகளை மட்டுமல்ல, அயல்நாடான இந்தியாவின் பங்கையும் விவரிக்காமல் இந்தப் போரை பற்றி எழுதமுடியாது. போரின் இறுதிக்காலத்தில் மேற்கு நாடுகள் பலவும் இதில் பங்குகொண்டன. இந்தப்போரில் முக்கிய பங்குகொண்ட விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழர்களுக்காக இலங்கை அரசோடு போராடியதுடன் மட்டும் நிற்கவில்லை. ஏனைய விடுதலை இயக்கங்களை எதிர்த்தும் போராடியது. அத்துடன் உள்நாட்டில் வாழ்ந்த ஏனைய இனத்தினரோடும் போராடியது. வெளிநாடுகள் முன்வைத்த தீர்வு யோசனைகளுக்கு எதிராகவும் போராடியது. ஒரு விதத்தில் பல முனைகளில் போரிடவேண்டிய நிலையை தங்களுக்குள் அவர்களே உருவாக்கினார்கள் என்று இந்நாவலாசிரியர், கானல் தேசம் நாவலை தான் ஏன் எழுதினேன் என்பதற்கான நியாயத்தை கற்பிக்கின்றார். சிறுகதை, நாவல், விமர்சனம், நூல் அறிமுகம், பயண இலக்கியம் முதலான துறைகளில் எழுதிவரும் நடேசன், அவுஸ்திரேலியாவில் தொழில் ரீதியில் விலங்கு மருத்துவருமாவார். அதனால், தனது தொழில்சார் அனுபவங்களையும் புனைவுகளாக்கிவருபவர். அவ்வாறு எழுதப்பட்ட இவரது வாழும் சுவடுகள் நூலும் இரண்டு பதிப்புகளை கண்டுள்ளது. ஏற்கனவே இவர் எழுதியிருக்கும் வண்ணாத்திக்குளம், உனையே மயல்கொண்டு ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. இதில் வண்ணாத்திக்குளம் சிங்கள மொழியிலும் வரவாகியுள்ளது. இவரது சிறுகதைகளும் ஆங்கிலம், சிங்களம் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தின் 856ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்