இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Tyristubbveien 77, 0687 Oslo, 1வது பதிப்பு மே 2016. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 169 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1- 326-64802-2. புலிகள் என்றும் விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் என்பது பலரின் எண்ணம். இந்த நாவல் புலிகளை விமர்சனம் செய்வதை நோக்காகக் கொண்டதல்ல. புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாட்டில் வாழ்ந்த பினாமிகள் செய்த சில கூத்துக்களின் சிறிய அம்பலம் இது. அதுவும் ஒருகோணத்தில் இருந்து பார்க்கப்பட்டது. இதற்கு மறுகோணங்கள் இல்லை என்பது ஆசிரியரது வாதமில்லை. அப்படியான பார்வைகளும், பதிவுக்கு வரவேண்டும் என்பதே அவரது விருப்பம். போராட்டம் நடக்கும் போது வைக்கப்படும் விமர்சனம் போராட்டத்தை நலிவுறுத்தும் என்பதை தனது கருத்தில் வைத்திருந்த ஆசிரியர் தற்போது புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்துவிட்ட நிலையில் தன் கருத்துக்களை எதிர்காலப் பாதையை செப்பமிடும் வகையில் தன் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கிறார். ஈழம் என்பது கனவாகிவிட்டது. இனி ஆயுதப் போராட்டம் என்பதே மீண்டும் வரக்கூடாது. இருந்தும் உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்பது இந்நாவலாசிரியரின் நிலைப்பாடாக உள்ளது.