செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கந்தையா குணராசா, 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, பதிப்பித்த ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கல்லச்சுப்பிரதி). (2), 63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 32×20 சமீ. 31 காட்சிகளில் எழுதப்பட்ட திரைக்கதைப் பிரதி இதுவாகும். “யானை” என்ற தலைப்பில் முன்னர் வரதர் வெளியீடாக 1978இல் வெளிவந்திருந்த நாவலின் திரைக்கதைவடிவம் இது. அடக்கு முறைக்கு எதிரான ஓரு மனிதனின் போராட்டம் இந்நாவலில் கூறப்பட்டுள்ளது. யானையும் காடும் குறியீடுகளாக அமைகின்றன. தம்பலகமத்தில் வீட்டாருக்குத் தெரியாமல் இரு காதலர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பி காட்டுப்பாதையால் செல்கின்றனர். நொண்டி யானையினால் காதலி கொல்லப்படுகிறாள். காதலன் அந்த யானையைத் தொடர்ந்து சென்று பழிவாங்குவதாகக் கதை அமைகின்றது. The Beast என்ற பெயரில் ஆங்கிலத்தில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளது. செங்காரன் என்ற மனிதன் பழிவாங்கல் என்ற உணர்வினால் “நொண்டி யானை”யின் நிலைக்கு இறங்கியிருப்பதும், இறந்துபோன யானை, மனித நிலைக்கு உயர்ந்து நிற்பதும் நாவலின் இறுதியில் மனதில் நிலைக்கின்றது. பழிவாங்கல் மனிதனை மிருக நிலைக்கு இறக்கிவிடுகின்றது என்பதை இந்நாவல் சித்திரிக்கின்றது. மனித குலத்திற்கு ஒவ்வாத பழிவாங்கல் உணர்ச்சிகளின் தீமையை ஆசிரியர் இந்நாவலில் சுட்டிக்காட்டுகின்றார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55180).