14785 பாதி உறவு: குறுநாவல்.

பார்த்திபன். ஜேர்மனி: தென்னாசிய நிறுவனம், Sud Asien Buro Kiefern str. 45, 5600, Wuppertal -2, West Germany, 1வது பதிப்பு, ஜுலை 1987. (கல்லச்சுப் பிரதி). 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ. 1987-1988 காலப்பகுதியில் ஜெர்மனியில் இருந்து வெளியாகிய சிறு சஞ்சிகைகள் 20இற்கும் மேற்பட்டவையாகும். இவற்றில் அனேகமானவை கையெழுத்துப் பிரதிகளாகவும் ஒரு சில தட்டச்சில் எழுதப்பட்டவையாகவும் காணப்பட்டன. கலைவிளக்கு, சிந்தனை, தூண்டில், வெகுஜனம், புதுமை, பெண்கள் வட்டம், ஏலையா, அறுவை, வண்ணத்துப்பூச்சி, யாத்திரை, நம்நாடு, தாயகம், யதார்த்தம் போன்றவை அவற்றுட் சில. பார்த்திபன் அவர்கள் “தூண்டில்” என்ற சஞ்சிகையின் ஆசிரியர் குழுவான கடலோடிகளில் முக்கியமானவர். பார்த்திபன் 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். தூண்டில் என்ற சஞ்சிகையை இவர் 50 இதழ்கள் வரை வெளியிட்டுவந்துள்ளார். இவற்றைவிட நிஜங்கள் (நான்கு சிறுகதைகள், 1986), ஜனனம்(மூன்று சிறுகதைகள், 1986), வித்தியாசப்படும் வித்தியாசங்கள்(குறுநாவல்,1987), பாதி உறவு (குறுநாவல்,1987), ஆண்கள் விற்பனைக்கு(நாவல்,1988) ஆகிய தலைப்புகளில் பார்த்திபன் தான் எழுதிய குறு நாவல்கள், நாவல் நூல்களை ஜெர்மனியில் இருந்து தட்டச்சின் மூலம் வெகு நேர்த்தியாக வெளியிட்ட முன்னோடியாவார். இவரது குறுநாவல்கள் ஆழ்ந்த மனிதநேயங் கொண்டவை. கதைகளின் மொழி, உரையாடல், நகைச்சுவை போன்றவை புகலிடத்தின் பொது முகாம்களில் இளைஞர்களுக்கு இடையில் நடைபெறும் அன்றாட சம்பாஷனையில் இருந்து பெறப்பட்டவை போன்றிருக்கும். குழந்தைகளுடன் அவர்களின் மனங்களும் படிப்படியான அனுபவங்களினாலும் படிப்பினாலும் தான் வளர்ச்சியடைகின்றன. திடீரென அவர்கள் பெரியவர்களாகி விடுவதில்லை. குழந்தைப் பருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. குழந்தைகளைப் பெற்றோர்களுடன் சூழ்நிலைகளும் சேர்ந்தே வளர்க்கின்றன. தமது பிள்ளைகள் தீயவர்களாக வளரவேண்டும் என எந்தப் பெற்றோரும் திட்டம் போட்டு வளர்ப்பதில்லை. ஆனால் தங்களது கவனக் குறைவால் பிள்ளைகளை அழிவுப் பாதையில் செல்ல அனுமதித்து விடுகிறார்கள். இதைத் தடுக்க முடியாதா? முடியும் என்பதனை, ரவீந்திரன்-நந்தினி ஆகியோரின் குடும்ப வாழ்க்கையினூடாக வெளிப்படுத்துகின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 071432).

ஏனைய பதிவுகள்