அப்துல் றஸாக். அக்கரைப்பற்று 01: துயரி வெளியீடு, 37, பழைய பொலிஸ் நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). xii, 152 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ. பல்கலைக்கழக வாழ்வின் அந்திம நாட்களில் அந்த வாழ்வின் இரைமீட்டலாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வளாக வாழ்வில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனதை அரிக்கும் சில பொறிகளை மட்டும் ஆசிரியர் பிய்த்தெடுத்தத் தர முன்வந்துள்ளார். அவரால் நம்முடன் பகிர்ந்துகொள்ள முடியாத மீதிப் பொறிகளே கதை முடிந்த பின்னரும் எமது மனங்களில் வளரச்செய்கின்றன. முர்ஷித், ஷெ ரீன், நபிஸா, பவாஸ் இலாஹி, சமீர், ஷாகிதா, ஆகில் ஆகிய ஏழு பாத்திரங்களின் ஞாபக அடுக்குகளிலிருந்து வாக்குமூலங்களாக வெளிவருகின்றன. இந்த வளாக வாழ்வின் விரிந்த பரப்பில் அன்பின் இழைகளால் அவர்கள் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறார்கள். முர்ஷித், இந்த எல்லாப் பாத்திரங்களையும் இணைக்கும் கண்ணியாக எல்லாவற்றுக்குள்ளும் வந்து போகின்றான். அன்பு தான் இந்த வாக்குமூலங்களின் அடியாழத்தில் ஊடுபாவி நிற்கின்றது. ஒன்றில் அது நட்பாக ஒளிர்கின்றது. இல்லாவிடில் காதலாகிக் கசிந்துருகி நிற்கின்றது. இந்த அன்பின் இழை பிரதான ஏழு பாத்திரங்களினுள்ளும் வெவ்வேறு விகிதங்களில் கலக்கின்றது. தனிப்பட்ட வாக்குமூலங்களினூடாக கதைசொல்லி நடமாடும் கையாளுகை இந்நாவலை மரபுரீதியானதொரு நாவலாகவன்றி பல சிறுகதைகளின் தொடராகவோ அல்லது ஒரு சிறுகதையின் நீட்சியாகவோ காணத்தூண்டுகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001829).