14828 மாய மீட்சி.

மிலான் குந்தேரா (செக்கோஸ்லோவாக்கிய மூலம்), மணி வேலுப்பிள்ளை (தமிழாக்கம்). சென்னை 600087: வாழும் தமிழ், பிளாட் நம்பர் 44, 5ஆவது தெரு, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (சென்னை 5: ஜோதி ஆப்செட்). 167 பக்கம், விலை: இந்திய ரூபா 210., அளவு: 21×14 சமீ. 52 அத்தியாயங்களில் விரியும் நாவல் இது. மணி வேலுப்பிள்ளையின் மூன்றாவது நூலாகவும் வெளிவந்துள்ளது. ஈழத்தமிழரின் அலைந்துழல் வாழ்க்கையை ஈரானியர்களின் பார்வையில் சொல்லப்பட்டது போன்ற ஒரு மாயையை இந்நாவல் தோற்றுவிக்கும் அளவுக்கு இரண்டு வேறுபட்ட சமூகங்களின் அவலவாழ்வும் தாயகக் கனவும் ஒரே மாதிரியான அனுபவங்களையே ஆங்காங்கே கொண்டிருக்கின்றன. ‘அறியாமை” என்ற தலைப்பில் மிலான் குந்தேரா எழுதிய நாவலின் ஆங்கில வழி மொழிபெயர்ப்பு இதுவாகும். மிலான் குந்தேரா செக்கோஸ்லோவாக்கிய நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்தவர். இரு மொழிகளிலும் எழுதிவரும் ஓர் இலக்கியவாதி. இந்நாவலில் பேசப்படும் பாத்திரங்களுள் இரினாவும் செக். நாட்டிலிருந்து பிரான்சுக்குக் குடிபெயர்ந்தவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். பிரான்சில் அவளுடன் கூடிவாழும் கஸ்தாவ் சுவீடனிலிருந்து பிரான்சுக்குக் குடிபெயர்ந்தவன். அவர்கள் தாயகம் நோக்கிய பயணிகளாக செக் நாட்டிற்குத் திரும்புகிறார்கள். யோசெப் செக் நாட்டிலிருந்து டென்மார்க்கிற்கு குடிபெயர்ந்தவன். தாயகத்து மனைவியைக் கைவிட்டு டென்மார்க்கில் ஒரு பெண்ணைக் கைப்பிடித்தவன். அவனும் செக் நாடு திரும்புகின்றான். நாடு திரும்பும் வழியில் இரினாவும் யோசெப்பும் சந்திக்கிறார்கள். தாய்நாடு திரும்பியது குறித்து இரினா ஏமாற்றம் அடைகிறாள். யோசெப் கூட இறுதியில் தாயகக் கனவைக் கைவிட்டு டென்மார்க்குக்குத் திரும்புகிறான். பிரதான பாத்திரங்கள் அனைவருக்கும் தாயக வேட்கை உண்டு. எனினும் எவருக்குமே மீட்சி கைகூடவில்லை. நினைவில் புதையுண்ட மீட்சி, நனவில் கைகூடாது போகின்றமையே இக்கதையின் பிரதான கருவாகும். அதுவே மாய மீட்சியாகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 066488).

ஏனைய பதிவுகள்